ADDED : டிச 15, 2024 10:57 PM
பெலகாவி: கைதி ஒருவர் கஞ்சா பாக்கெட்டை கொண்டு செல்வதை தடுத்த, உதவி ஜெயிலரை தாக்கியதில் காயமடைந்த அவர், சிகிச்சை பெறுகிறார்.
பெலகாவியின், ஹிண்டல்கா மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றுபவர் காம்ப்ளே. இவர் கடந்த 11ம் தேதி, சிறையின் பேரக் எண் 08ல், பின்புறம் சுவர் அருகில் சென்றார். அப்போது கைதி ஷாஹித் குரேஷி என்பவர், கஞ்சா பாக்கெட் கொண்டு செல்வதை கவனித்தார்.
கைதியிடம் இருந்து அதை பறித்து, தலைமை ஜெயிலரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றார். அப்போது கைதி, உதவி ஜெயிலர் காம்ப்ளேவிடம் இருந்து பாக்கெட்டை பறித்தார். அவரை கீழே தள்ளி கடுமையாக தாக்கினார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தடையை மீதி, சிறைக்குள் கஞ்சா கொண்டு சென்ற கைதி ஷாஹித் குரேஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில் குளிர் கால கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த நேரத்தில் பெலகாவி மத்திய சிறையில், உதவி ஜெயிலர் மீது, கைதி தாக்குதல் நடத்திய சம்பவம் வெளியே தெரிந்தால், அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், சிறை அதிகாரிகள் சம்பவத்தை மூடி மறைத்தாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.