ADDED : அக் 26, 2024 08:07 AM

கொப்பால்: கங்காவதி மரகும்பி கிராம கலவர வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட தகவலை கேள்விப்பட்ட குற்றவாளி, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கொப்பால் மாவட்டம், 2014ம் ஆண்டு செப்., 28ம் தேதி, கங்காவதி டவுனில் உள்ள திரையரங்கில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக, இரு சமூக வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
அன்றைய தினம் இரவு, தலித் சமூகத்தினர் வசிக்கும் மரகும்பி கிராமத்தில் புகுந்த மற்றொரு சமூகத்தினர், குடிசைகளுக்கு தீ வைத்தனர். இதில், 27 பேர் தீக்காயம் அடைந்தனர். இவ்வழக்கில் 117 பேர் மீது வழக்குப் பதிவானது.
கொப்பால் மாவட்ட முதன்மை மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது 16 பேர் இறந்தனர். மீதம் 101 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 101 பேரில், 98 பேருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்த தகவல், மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ராமப்பா போவி, 44, என்பவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவருக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.