ADDED : பிப் 04, 2024 12:43 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், நில அபகரிப்பு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறையினரால் கடந்த மாதம் 31ல் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சம்பாய் சோரன் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.
சம்பாய் சோரன் அரசு மீது மாநில சட்டசபையில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது.
இந்நிலையில், கைதாகி அமலாக்கத் துறையின் காவலில் உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க அனுமதிக்குமாறு ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், நாளை சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்க அனுமதி வழங்கியது.