கஞ்சா புகைத்தபடி வீடியோ கால் பேசிய கைதிகள்; பரவும் வீடியோவால் காங்., அரசுக்கு தலைவலி
கஞ்சா புகைத்தபடி வீடியோ கால் பேசிய கைதிகள்; பரவும் வீடியோவால் காங்., அரசுக்கு தலைவலி
ADDED : அக் 15, 2024 12:19 AM

கலபுரகி : கலபுரகி மத்திய சிறையில், மூன்று கைதிகள் கஞ்சா புகைத்தபடி, மொபைல் போனில் வீடியோ கால் பேசிய காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது, காங்கிரஸ் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் முக்கிய சிறைகள், சர்ச்சைக்குரிய மையங்களாக மாறுகின்றன. தவறு செய்து குற்றவாளிகளாகும் கைதிகளை, மனம் திருந்தி வாழ வழிவகுப்பதில், சிறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவறை உணர வேண்டும் என்பதற்காக, சிறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் சமீப ஆண்டுகளாக, சிறைகளில் கைதிகளுக்கு ராஜ உபச்சாரம் கிடைக்கிறது. பணம் கொடுத்தால் வெளியே கிடைக்கும் அத்தனை வசதிகளும் சிறைக்குள் கிடைக்கின்றன. பல வகையான உணவு, சிகரெட், கஞ்சா, போதைப் பொருள், மொபைல் போன் என, தேவையான வசதிகள் செய்யப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, சிறைக்கு செல்லும் வி.ஐ.பி.,க்கள், ரவுடிகளுக்கு சொகுசு வசதிகள் கிடைக்கின்றன. சிறையில் அமர்ந்தபடியே, ரவுடிகள் போன் மூலமாக, தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பதும் நடக்கிறது.
ரேணுகாசாமி கொலை வழக்கில், கைதான நடிகர் தர்ஷனுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. சிறை வளாகத்தில் தர்ஷன், ரவுடி உட்பட சிலருடன் இருக்கையில் சிகரெட் பிடித்தபடி அமர்ந்துள்ள படங்கள், சமூக வலைதளத்தில் வெளியானது. இது, சர்ச்சைக்கு காரணமானது.
அதன்பின் தர்ஷன், பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். சிறைகளில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், உயர் அதிகாரிகள் அவ்வப்போது சிறைகளில் சோதனை நடத்துகின்றனர். ஒவ்வொரு முறையும், கைதிகளிடம் கத்தி, கஞ்சா, சிம் கார்டு, குட்கா என, தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன், பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், ரவுடி ஒருவர் மொபைல் போன் மூலமாக, சாட்சி ஆறுமுகம் என்பவருக்கு, வாய்ஸ் மெசேஜ் மூலம், தமிழும், கன்னடமும் கலந்த மொழியில் பேசி தகாத வார்த்தைகளால் திட்டினார். ஜோசப் பாபு என்ற பப்லி கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க கூடாது என, மிரட்டினார். இது குறித்து, ஆறுமுகம் சி.சி.பி.,போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர்.
இதற்கிடையே கலபுரகி சிறையில், மூன்று கைதிகள் கஞ்சா புகைத்தபடி மொபைல் போனில் வீடியோ கால் பேசியது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
வெவ்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக, விஷால், சாகர், சோனு ஆகியோர் கைது செய்யப்பட்டு, கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்மூவரும் சிறை அறையில் அமர்ந்து, கஞ்சா புகைத்தபடி ஸ்மார்ட் போன் பயன்படுத்தி, வீடியோ கால் மூலமாக நண்பர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் நேற்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவின.
கலபுரகி சிறையில், துப்புரவு வேலை செய்யும் ஒரு பெண், கஞ்சா கொண்டு சென்று போலீசாரிடம் சிக்கினார். இவரை கைது செய்தனர். இப்போது சிறை அறைக்குள்ளேயே அமர்ந்து, மூன்று கைதிகள் கஞ்சா புகைத்தபடி, மொபைல் போனில் பேசியுள்ளனர்.
இது, பொது மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'சிறையா, சொகுசு விடுதியா. கைதிகளுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி, மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில், கைதிகள் கையில் மொபைல் எப்படி வந்தது, கஞ்சா எப்படி கிடைத்தது, இதை சிறை ஊழியர்கள் கண்டும், காணாமல் இருந்தனரா' என, சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறையில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை வைத்து, அரசை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் என்பதால் காங்., அரசுக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது.