பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளுக்கு தனியார் நிர்வாகிகளா? வங்கி ஊழியர்கள் கொந்தளிப்பு
பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளுக்கு தனியார் நிர்வாகிகளா? வங்கி ஊழியர்கள் கொந்தளிப்பு
ADDED : அக் 12, 2025 12:06 AM

புதுடில்லி: 'பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளை தனியார் துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் ஆபத்தானது' என, வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி.,யின் நிர்வாகத்தில் உள்ள உயர் பதவிகளுக்கு, தனியார் துறையை சேர்ந்த நிர்வாகிகளை பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்க, மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதற்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து யு.எப்.பி.யு., எனப்படும், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த புதிய விதி, பொதுத்துறை வங்கிகளின் தலைமை பொறுப்புகளை தனியார் மயமாக்கிவிடும். பாரத ஸ்டேட் வங்கி சட்டம், வங்கி நிறுவனங்கள் சட்டம் மற்றும் எல்.ஐ.சி., சட்டங்களில் எந்த திருத்தங்களையும் கொண்டு வராமல், நேரடியாக மத்திய அரசு இந்த மாற்றங்களை அறிமுகம் செய்திருக்கிறது.
தனியார் துறையை சேர்ந்தவர்களை உயர் பொறுப்பு வகிக்க அனுமதிப்பது பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கும் சட்டப்பூர்வ பொறுப்பை நீர்த்துப் போக செய்து விடும். பார்லி.,யின் பொறுப்பையும் குறைத்து விடும்.
தேசியமயமாக்கலுக்குப் பின் வகுக்கப்பட்ட வழி காட்டு நெறிமுறைகளையும் அழித்து விடும். தேசத்தின் பொருளாதார இறையாண்மைக்கு பொதுத்துறை வங் கிகள் தான் முதுகெலும்பாக செயல்படுகின்றன.
பின்வாசல் வழியாக அதன் சட்டப்பூர்வ தன்மையை நீர்த்துப் போக செய்யவோ, தனியார் மயமாக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.