தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு
தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு
ADDED : நவ 24, 2025 01:21 AM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டில்லியில் நேற்று காலை, காற்றின் சராசரி தரக் குறியீடு 381ஆக பதிவாகி இருந்தது. 10வது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. குளிர்காலம் துவங்கி விட்டதால், காற்றின் தரம் அபாய நிலைக்குச் செல்லும் எனவும் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
காற்று மாசைக் கட்டுக்குள் கொண்டு வர டில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், காற்று தர மேலாண்மை ஆணைய அறிவுறுத்தல்களையும் டில்லி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், டில்லி அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காற்று தர மேலாண்மை ஆணைய அறிவுறுத்தல்படி, மூன்றாம் நிலை கட்டுப்பாட்டு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் மற்றும் டில்லி மாநகராட்சியில் வேலை நேரம் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

