ADDED : செப் 30, 2024 12:17 AM

பெங்களூரு: ''மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பு நடந்துள்ளதாக புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் வாங்கிய 33 நிறுவனங்கள், ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த போதும், 576 கோடி ரூபாயை, பா.ஜ.,வுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர். இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாநில மக்களுக்காக செய்தது என்ன? மோடி அரசில், குமாரசாமி உட்பட 23 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இங்குள்ள பா.ஜ., தலைவர் ஒருவர் மீது போக்சோ வழக்கும் பதிவாகி உள்ளது.
ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சிறையில் உள்ள எம்.எல்.ஏ., முனிரத்னாவை, கட்சியில் இருந்து நீக்க பயமாக உள்ளதா. கவர்னரை வைத்து விளையாடுகின்றனர். நாங்கள் பயப்பட மாட்டோம்.
இப்போது, காங்கிரசின் சோனியா, ராகுல் மீது குற்றம் சொல்வோர், 11 ஆண்டாக ஏன் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.