காசாவில் இனப்படுகொலை செய்ததாக பிரியங்கா புகார்: இஸ்ரேல் தூதர் பதில்
காசாவில் இனப்படுகொலை செய்ததாக பிரியங்கா புகார்: இஸ்ரேல் தூதர் பதில்
ADDED : ஆக 12, 2025 02:23 PM

புதுடில்லி: காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் காட்டமான பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி பிரியங்கா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் அரசு இனப்படுகொலையைச் செய்து வருகிறது. அது 60,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது, அவர்களில் 18,430 பேர் குழந்தைகள். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பட்டினியால் இறந்துள்ளனர். முக்கியமாக பல குழந்தைகள் இறந்துள்ளனர்.
மேலும் லட்சக்கணக்கானவர்களை பட்டினியால் வாடும் அபாயத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இந்த அழிவை கட்டவிழ்த்து விடும்போது மத்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் எம்பி பிரியங்காவின் கருத்து குறித்து இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உங்கள் வஞ்சகம் வெட்கக்கேடானது. இஸ்ரேல் 25 ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகளைக் கொன்றது. ஹமாஸ் பயங்கரவாதிகள், அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்.
ஹமாஸ் அவர்களைப் பிடிக்க முயற்சிக்கும் அதே வேளையில், இஸ்ரேல் காசாவில் 2 மில்லியன் டன் உணவை வழங்கியது. இதன் மூலம் பசியை போக்கியது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450% அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.