பிரியங்கா கன்னம் போல் சாலை: பா.ஜ., வேட்பாளர் வாக்குறுதியால் காங்., கோபம்
பிரியங்கா கன்னம் போல் சாலை: பா.ஜ., வேட்பாளர் வாக்குறுதியால் காங்., கோபம்
UPDATED : ஜன 05, 2025 09:56 PM
ADDED : ஜன 05, 2025 07:45 PM

புதுடில்லி: ''டில்லியில் நான் வெற்றி பெற்றால், காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கன்னங்கள் போன்று சாலை அமைக்கப்படும்,'' என பா.ஜ., வேட்பாளர் ஒருவர் அளித்த வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவருக்கும், பா.ஜ.,வுக்கும் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
டில்லியின் கல்கஜி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுபவர் ரமேஷ் பிதுரி. இவர் பிரசாரத்தின் போது, ' நான் வெற்றி பெற்றால், பிரியங்காவின் கன்னம் போல் சாலை அமைத்து தருவேன்', எனக்கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரசின் சுப்ரியா ஸ்ரீநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரமேஷ் பிதுரியின் கருத்து அவரின் மனநிலையையும், பா.ஜ.,வின் உண்மையான முகத்தையும் எடுத்துக் காட்டுகிறது. பா.ஜ., பெண்களுக்கு எதிரான கட்சி. லோக்சபாவில் சக எம்.பி., ஒருவரை மோசமாக விமர்சித்ததற்காக எந்த தண்டனையும் கிடைக்காத நபரிடம் எப்படி நாகரீகமான கருத்தை எதிர்பார்க்க முடியும். இதற்காக பா.ஜ., பிரியங்காவிடம் கையேந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பதிலடி
பிரியங்காவை ஒப்பிட்டு கூறியதை உறுதி செய்த ரமேஷ் பிதுரி மேலும் கூறியதாவது: லாலு பிரசாத் யாதவ், ஒரு முறை பீஹார் சாலையை ஹேமா மாலினியின் கன்னம் போல் மாற்றுவேன் என்றார். இன்று எனது கருத்தால், வேதனை அடைந்ததாக கூறும் காங்கிரஸ், ஹேமா மாலினி குறித்து கவலைப்படாதது ஏன். அவர் பிரபலமான ஹீரோயின். திரைப்படம் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். லாலுவின் கருத்துக்காக எந்த கவலையையும் தெரிவிக்காதவர்கள், எப்படி என்னை கேள்வி கேட்கலாம்.ஹேமா மாலினி பெண் இல்லையா? சாதனை என்று வரும்போது, பிரியங்காவை விட அவர் உயர்ந்தவர் தான்.இவ்வாறு அவர் கூறினார்.
ரமேஷ் பிதுரியின் கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இவரின் கருத்துகள், பெண்களுக்கு பா.ஜ., அளிக்கும் மரியாதையை காட்டுகிறது. இவரைப் போன்றவர்களால், டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா. இவ்வாறு அவர் கூறினார்.