'கூகுள், மெட்டா' நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
'கூகுள், மெட்டா' நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ADDED : ஜூலை 20, 2025 07:33 AM

புதுடில்லி: சட்டவிரோத, 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளை ஊக்குவித்ததாக, 'கூகுள், மெட்டா' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிஉள்ளது.
'ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் - 365' உள்ளிட்ட சூதாட்ட செயலிகளை வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த, 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி, பிரபல நடிகர்களும் நடித்திருந்தனர். இதை நம்பி விளையாடிய பலர், 3 கோடி ரூபாய் வரை இழந்ததாக தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்த, பிரபலங்கள் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீஸ் பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவாரகொண்டா, ராணா டகுபதி உட்பட திரை பிரபலங்கள், 'இன்ஸ்டா, யு டியூப்' சமூக ஊடக பிரபலங்கள் என, 29 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களின் வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிமாற்றங்களை ஆய்வு செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான, 'கூகுள், மெட்டா'வையும் அமலாக்கத் துறை இணைத்துள்ளது. இந்த நிறுவனங்கள், விளம்பரங்கள் வாயிலாக சூதாட்ட செயலிகள் பயனர்களை சென்றடைய உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளை தரவிறக்கம் செய்யும், 'ஆப் ஸ்டோர்'களில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்றும் அமலாக்கத் துறை கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக, 'கூகுள், மெட்டா' நிறுவன அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன், நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.