மேற்குவங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்:தீர்ந்தது பிரச்னை!
மேற்குவங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்:தீர்ந்தது பிரச்னை!
UPDATED : மே 09, 2026 07:59 PM
ADDED : மே 09, 2026 07:53 PM

கொல்கட்டா:மேற்கு வங்கத்தில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, 55, முதல்வராக (மே 9) பதவியேற்றார். பா.ஜ.,வின் வெற்றிக்கு வித்திட்ட மக்களுக்கு, விழா மேடையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பால்டா சட்டசபை தொகுதியில் மட்டும், வரும் 21ல் மறு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
கடந்த 4ல், 293 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பா.ஜ., 293 தொகுதிகளில், 207ஐ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., வெறும், 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
சொந்த தொகுதியான பவானிபூரிலேயே மம்தா தோற்றது திரிணமுல் காங்., நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ள பா.ஜ., மம்தா பானர்ஜியின், 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதி உள்ளது.
கொல்கட்டாவில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், புதிதாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், தொடர்ச்சியாக இரு முறை மம்தா பானர்ஜியை வீழ்த்திய சுவேந்து அதிகாரி, பா.ஜ., சட்டசபை குழு தலைவராக, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, லோக் பவனில் கவர்னர் ரவியை சந்தித்த சுவேந்து அதிகாரி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்கும்படி அவருக்கு கவர்னர் ரவி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், கொல்கட்டாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரிகேட் மைதானத்தில், பா.ஜ., அரசின் பதவியேற்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. அப்போது, மேற்கு வங்கத்தின் ஒன்பதாவது முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தொடர்ந்து, பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் திலீப் கோஷ் அமைச்சராக பதவியேற்றார். மேலும், அக்னி மித்ரா பால், அசோக் கிர்தானியா, சுதிராம் துடு, நிசித் பிரமாணிக் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த ஆறு பேர் அடங்கிய அமைச்சரவை, மேற்கு வங்கத்தின் சமூக மற்றும் பிராந்திய சமநிலையை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதில், பிராமண, ஓ.பி.சி., பழங்குடியின, மதுவா, ராஜ்பன்ஷி சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
கொல்கட்டாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அன்றைய தினமே முதல் அமைச்சரவை கூட்டம் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாகவும், பின், திரிணமுல் காங்கிரசின் பலத்தை நிரூபிக்கும் இடமாகவும் இருந்த பிரிகேட் மைதானம், தற்போது, இரட்டை இன்ஜின் அரசு என்ற முழக்கங்களுடன் பா.ஜ.,வின் வெற்றி கோட்டையாக மாறியுள்ளது.

