'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து அவதுாறு: பேராசிரியர் கைது
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து அவதுாறு: பேராசிரியர் கைது
ADDED : மே 18, 2025 11:40 PM

சண்டிகர்: ஹரியானாவின் சோனிப்பட்டில், தனியாருக்கு சொந்தமான அசோகா பல்கலை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இணைப் பேராசிரியர் அலிகான் மஹ்மூதாபாத் பணியாற்றி வருகிறார்.
நம் அண்டை நாடான பாக்.,கில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக நம் ராணுவத்தால் ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக, வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் சேர்ந்து கர்னல் ேஸாபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். இது குறித்து விமர்சித்த பேராசிரியர் அலிகான், 'ஆப்பரேஷன் சிந்துார் குறித்து ஸோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங்கின் விளக்கம் பாசாங்குத்தனமானது' என, தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் அவரது இந்த கருத்து வெளியானதை அடுத்து, நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வலியுறுத்தி, அலிகானுக்கு ஹரியானா மகளிர் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் அவர், நேரில் ஆஜராகவில்லை. இதற்கிடையே, ராணுவ அதிகாரிகளை அவமதித்ததாக அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், டில்லியில் அவரை நேற்று கைது செய்தனர்.
இது குறித்து அசோகா பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அலிகான் கருத்துக்கும், பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, பல்கலை தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டது. அவர் தற்போது கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணைக்கு பல்கலை முழு ஒத்துழைப்பு அளிக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.