கல்வி மற்றும் வரலாற்று ஆராய்ச்சியில் சாதித்த பேராசிரியை மீனாட்சி ஜெயின்
கல்வி மற்றும் வரலாற்று ஆராய்ச்சியில் சாதித்த பேராசிரியை மீனாட்சி ஜெயின்
ADDED : ஜூலை 15, 2025 06:51 AM

ராஜ்யசபா எம்.பி.,யாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மீனாட்சி ஜெயின், டில்லியில் உள்ள கல்வி வட்டாரங்களில் அனைவராலும் அறியப்பட்டவர். 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், பத்திரிகையாளருமான கிரிலால் ஜெயினின் மகளான மீனாட்சி, 1991ல் டில்லி பல்கலையில், அரசியல் அறிவியல் பாடத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்து 'டாக்டர்' பட்டம் பெற்றார்.
தலைநகரில், டில்லி பல்கலைக்கு கீழ் செயல்படும் கார்கி கல்லூரியில், இணை பேராசியரியராக பணியாற்றி ஓய்வுபெற்றாலும், தன் ஆராய்ச்சிப் பணியை அவர் இன்றும் தொடர்கிறார். இந்திய வரலாறு மற்றும் மரபுகள் குறித்த இவரின் ஆராய்ச்சி, இன்றைய மாணவர்களுக்கு பெரிய வழிகாட்டி.
இவரின் ஆய்வுப் பணி சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. 'பிளைட் ஆட் டெய்ட்டீஸ் அண்ட் ரீபர்த் ஆப் டெம்பிள்ஸ்', 'தி பேட்டல் ஆப் ராமா: கேஸ் ஆப் தி டெம்பிள் அட் அயோத்தி' போன்ற நுால்களை மீனாட்சி எழுதியுள்ளார்.
இது தவிர, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்காக, 'மெடிவல் இந்தியா' என்ற பள்ளி பாடப்புத்தகத்தையும் மீனாட்சி எழுதியுள்ளார்.
கடந்த, 2014ல் மத்திய அரசால், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக மீனாட்சி நியமிக்கப்பட்டார். டில்லியில் உள்ள முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். மீனாட்சியின் கல்விப் பங்களிப்பை பாராட்டி, 2020ல் அவருக்கு மத்திய அரசு, உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது. ராஜ்யசபாவிற்கான அவரின் நியமனம், நம் நாட்டின் நாகரீக மரபு மற்றும் பாரம்பரியத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும்.
- நமது சிறப்பு நிருபர் -