மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றும் திட்டம் துவக்கம்
மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றும் திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 12, 2025 08:49 PM
புதுடில்லி:ஷாலிமர் பாக் தொகுதியில், மேல்நிலை மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றும் திட்டத்தை, முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்தார்.
புதுடில்லி ஷாலிமர் பாக், ஜந்தா பிளாட்ஸ் காலனி பி.ஹெச். பிளாக்கில், மேல்நிலை மின் ஒயர்களை, நிலத்தடிக்கு மாற்றும் திட்டத்தை முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
எட்டு கோடி ரூபாய் செலவில் மூன்று மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடர்த்தியான நெரிசலான காலனியில் மேல்நிலை மின் ஒயர்களை அகற்றி, பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
பூமிக்கடியில் மின் ஒயர் தடத்தை பதிப்பதால், அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பாதுகாப்பாக இருக்கும். மேலும், தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேல்நிலை மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்ற பட்ஜெட்டில், 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.