வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது! அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் திட்டவட்டம்
வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது! அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் திட்டவட்டம்
ADDED : நவ 01, 2024 07:10 AM

உடுப்பி: “ஐந்து வாக்குறுதித் திட்டங்கள், நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளன. கர்நாடக அரசு செயல்படுத்திய திட்டங்கள், எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது,” என மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
உடுப்பியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'சக்தி' திட்டத்தால், லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். யாரோ சிலர் திட்டத்தை நிறுத்தும்படி அரசிடம் கூறினால் நிறுத்த முடியாது. 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், போக்குவரத்துக் கழகங்களுக்கும் நற்பெயர் கிடைத்துள்ளது. நல்ல லாபத்தில் இயங்குகின்றன.
பெண்களை பொருத்த வரை, 'சக்தி' திட்டம், சஞ்சீவினியாக உள்ளது. ஐந்து வாக்குறுதித் திட்டங்கள், நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளன. கர்நாடக அரசு செயல்படுத்திய திட்டங்கள், எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது.
சிவகுமார் மாநில காங்கிரஸ் தலைவரான பின், விலை உயர்வு குறித்து அவரிடம் பெண்கள் வருத்தம் தெரிவித்தனர். பெண்களுக்கு உதவும் நோக்கில், தேர்தலுக்கு முன்பே ஐந்து வாக்குறுதி திட்டங்களை கட்சி செயல்படுத்தியது. 'சக்தி' திட்டம் சிவகுமாரின் கனவுத் திட்டமாகும். அதை நிறுத்தவே முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.