காற்றில் பறக்கும் வாக்குறுதிகள் காங்கிரசுக்கு ம.ஜ.த., சவால்
காற்றில் பறக்கும் வாக்குறுதிகள் காங்கிரசுக்கு ம.ஜ.த., சவால்
ADDED : மார் 08, 2024 02:14 AM
பங்கார்பேட்டை: ''லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ற பார்க்கலாம்,'' என, மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் சவால் விட்டார்.
பங்கார்பேட்டையில் நேற்று முன் தினம் நடந்த ம.ஜ.த., செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் பேசியதாவது:
நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. உலகமே பாராட்டும் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தர்மத்தை இரு கட்சிகளுமே கடைபிடிக்கும். இரு கட்சிகளும் ஒரு தாய் பிள்ளைகளாக செயல்படுவோம்.
கடந்த லோக்சபா தேர்தலில் ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி இருந்தது; கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் கடைபிடிக்கவே இல்லை. துமகூரு, மாண்டியா தொகுதிகளில் அவர்கள் செய்த துரோகத்தை வாழ்நாளில் மறக்கவே முடியாது.
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறினர். தற்போது அரசின் நிதி நிலை மிகவும் நெருக்கடியில் உள்ளதாக கூறுவது ஏன்?
மக்கள் வரிப் பணம், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. மேலும் வளர்ச்சித் திட்டப் பணிகள், வறட்சி திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா முதிர்ந்த வயதிலும் விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார். ஆனால் கர்நாடகாவில் வறுமையால் 672 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை, காங்கிரஸ் அரசு கவனிக்காமல் உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு பின், தைரியம் இருந்தால், கர்நாடக ஆட்சியை நடத்தும் காங்கிரஸ், வாக்குறுதிகளை தொடரட்டும் பார்க்கலாம்.
இவ்வாறு அவர்பேசினார்.

