மருந்துகளின் பக்கவிளைவு அறிய மருந்தகங்களில் 'கியூ.ஆர்., கோடு'
மருந்துகளின் பக்கவிளைவு அறிய மருந்தகங்களில் 'கியூ.ஆர்., கோடு'
ADDED : நவ 28, 2025 05:50 AM

சென்னை: 'மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து பொதுமக்கள் அறிய, மருந்தகங்களில், கியூ.ஆர்., குறியீட்டை காட்சிப்படுத்த வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை தலைவர் ராஜிவ்சிங் ரகுவன்ஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
இந்திய மருந்து நிறுவன கண்காணிப்பு திட்ட செயற்குழு கூட்டம், கடந்த ஜூனில் நடந்தது. நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருந்து பாதுகாப்பு செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில், இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், மருந்துகளின் பக்க விளைவுகளை பொதுமக்கள் அறிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, நாடு முழுதும் உள்ள ஒவ்வொரு சில்லரை மற்றும் மொத்த விற்பனை மருந்தகத்திலும், மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கியூ.ஆர்., குறியீட்டை முக்கிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.
அதை தங்கள் மொபைல் போனில், 'ஸ்கேன்' செய்தால், அந்த மருந்தின் பக்கவிளைவு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
அனைத்து மாநிலங்களிலும், மருந்தகங்களில், கியூ.ஆர்., குறியீடு மற்றும் உதவி எண்களை காட்சிப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

