'ஸ்மார்ட் டிவி, ப்ரிஜ்' வாங்கியதற்கு ஆதாரம்: சிக்கலில் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரன்
'ஸ்மார்ட் டிவி, ப்ரிஜ்' வாங்கியதற்கு ஆதாரம்: சிக்கலில் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரன்
ADDED : ஏப் 08, 2024 04:28 AM

ராஞ்சி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதான பண மோசடி வழக்கில், குளிர் சாதன பெட்டி, ஸ்மார்ட் 'டிவி' வாங்கப்பட்டது தொடர்பான ரசீதுகளை, அவருக்கு எதிரான ஆதாரங்களாக அமலாக்கத் துறை அதிகாரிகள் குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளனர்.
ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நில அபகரிப்பு வழக்கு
இங்கு முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், நில அபகரிப்பு வழக்கில் கடந்த ஜன., 31ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது ராஞ்சியின் ஹோட்வாரில் உள்ள பிர்சா முண்டா சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சமீபத்தில், ராஞ்சியில் ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான, 31 கோடி ரூபாய் மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத் துறையினர் முடக்கினர். இதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில், ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இத்துடன், இரு முக்கிய ரசீதுகளையும் அவர்கள் இணைத்துள்ளனர். இவை, ஹேமந்த் சோரனுக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் என, அமலாக்கத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஹேமந்த் சோரனின் 8.86 ஏக்கர் நிலத்துக்கு, ராஜ்குமார் பஹான் என்பவர் உரிமை கோருவது ஏற்புடையது அல்ல. 2023 ஆகஸ்டில், இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு முதல் சம்மன் அனுப்பப்பட்ட உடனேயே, இந்த நிலம் தனக்கும், மற்றவர்களுக்கும் சொந்தமானதாகவும், முந்தைய பதிவுகளை ரத்து செய்யக் கோரியும், ராஞ்சி துணை கமிஷனருக்கு ராஜ்குமார் பஹான் கடிதம் எழுதி உள்ளார்.
முக்கிய ஆதாரம்
ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன், அதாவது ஜன., 29ல், இந்த நிலத்தை, ராஜ்குமார் பஹானுக்கு மாநில அரசு மாற்றிக் கொடுத்துள்ளது. இந்த நிலம், சந்தோஷ் முண்டா என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஹேமந்த் சோரனும், அவரது மனைவி கல்பனாவும் இந்த நிலத்தை மூன்று முறை நேரில் பார்வையிட்டதாகவும், அந்த இடத்தில் எல்லை சுவர் எழுப்பும் போது, தொழிலாளியாக வேலை செய்ததாகவும் சந்தோஷ் முண்டா அமலாக்கத் துறையிடம் தெரிவித்தார்.
ஹேமந்த் சோரனின் உத்தரவுப்படி, இந்த நிலத்தை பாதுகாக்கும் பொறுப்பு சந்தோஷ் முண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் ஹிலாரியாஸ் கச்சாப், அந்த நிலத்தில் மின் மீட்டரை நிறுவியதாகக் கூறினார்.
இந்த நிலத்தின் முகவரியில், சந்தோஷ் முண்டாவின் மகனின் பெயரில், 2017 பிப்ரவரியில் ஒரு குளிர்சாதன பெட்டியும், அவரது மகளின் பெயரில், 2022 நவம்பரில் ஸ்மார்ட் டிவியும் வாங்கப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த சொத்தில் சந்தோஷ் முண்டாவும், அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தது தெளிவாக தெரிகிறது. மேலும், ராஜ்குமார் பஹான் வசம் இந்த நிலம் இல்லை என்பதும் நிரூபணமாகி உள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், இந்த இரு ரசீதுகளையும் இணைத்துள்ளனர். இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு எதிராக முக்கிய ஆதாரங்களாக இவை கருதப்படுகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

