ADDED : நவ 29, 2025 01:01 AM

சிவகங்கை: தமிழகத்தில் 2026 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, தி.மு.க.,- காங்., கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட வாரியாக கட்சி கூட்டங்களை நடத்தி, வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற சீமான், சிவகங்கையில் இந்துஜா, மானாமதுரையில் சண்முகபிரியா, திருப்புத்துாரில் ரம்யா மோகன் ஆகியோரை வேட்பாளராக அறிவித்தார். ஆனால், காரைக்குடி வேட்பாளரை அறிவிக்காமல், 'சஸ்பென்ஸ்' வைத்து சென்றார். அங்கு சீமான் போட்டியிட உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது: சீமான் ஏற்கனவே போட்டியிட்ட திருவெற்றியூரில் அல்லது காரைக்குடியில் அவர் நிற்க வாய்ப்பு இருக்கிறது. திருச்சியில் நடக்க உள்ள 234 தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடலாம் என்றனர்.

