பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் தகவல்
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் தகவல்
UPDATED : ஜன 12, 2026 11:06 AM
ADDED : ஜன 12, 2026 10:22 AM

ஸ்ரீஹரிகோட்டா: ''இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை,'' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இன்று ( ஜனவரி 12) காலை 10:18 மணிக்கு, புவியை கண்காணிக்கும், இ.ஓ.எஸ்., - என்1 உட்பட, 18 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி-சி62 / இஓஎஸ்-என்1 திட்டம், 2026ம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் ஏவுதல் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சற்று நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து திட்டம் இலக்கை அடையவில்லை என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். தரவுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாராயணன் கூறியதாவது: பிஎஸ்எல்வி செலுத்து வாகனம் நான்கு நிலைகள் கொண்டது. அவற்றில் இரண்டு நிலைகள் திட எரிபொருளையும், அடுத்த இரண்டு நிலைகள் திரவ எரிபொருளையும் கொண்டவை. மூன்றாம் நிலையின் நிறைவு நேரம் வரை எல்லாம் நன்றாகவே சென்றன.
மூன்றாம் நிலை முடிவுக்கு வரும்போது செலுத்து வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. தொடர்ந்து பிஎஸ்எல்வி வாகனம், திட்டமிட்ட பாதையில் இருந்து விலகியது. திட்டம் இலக்கை அடையவில்லை. இவ்வாறு நாராயணன் கூறினார்.
வீடியோவை பாருங்கள்
தினமலர் நேரலை ஒளிபரப்பு!

