புதுச்சேரி பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!
புதுச்சேரி பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!
ADDED : ஜன 14, 2025 10:41 AM

புதுச்சேரி; புதுச்சேரி பல்கலையில் மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலையில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் இந்த சம்பவம் பெரிதாக பேசப்பட்டது. இந் நிலையில், அதே போன்றதொரு சம்பவம் புதுச்சேரி பல்கலையில் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு;
காலாப்பட்டு பகுதியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒரு விடுதியில் தங்கி முதலாமாண்டு பயின்று வருகிறார்.
கடந்த ஞாயிறு விடுமுறை என்பதால் பல்கலை வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் சக மாணவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த இடத்துக்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த மாணவரை விரட்டிவிட்டு, மாணவியிடம் அத்துமீறியதாக தெரிகிறது.
மர்ம கும்பலிடம் இருந்து மாணவி தப்பித்து ஓடிய போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவி கூச்சலிடவே 3 பேரும் தப்பித்துச் சென்றுள்ளனர்.
பின்னர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி விடுதி திரும்பி உள்ளார். தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் பல்கலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியிடம் அத்துமீறியது அதே பல்கலையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் என்பதும், மற்ற இருவரையும் அவர்தான் உடன் அழைத்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.