35 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய புனே நண்பர்கள்: உத்தராகண்டில் மாயமான சோகம்
35 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய புனே நண்பர்கள்: உத்தராகண்டில் மாயமான சோகம்
ADDED : ஆக 07, 2025 09:55 PM

புனே: 1990 ம் ஆண்டு ஒன்றாக படித்த 20 பேர் உத்தராகண்டில் நடந்தமேகவடெிப்பு சம்பவத்தில் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசியின் தாராலி என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மேகவெடிப்பில் மழை கொட்டித் தீர்த்தது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் மாயமாகினர். அவர்களை ராணுவத்தினர், தேசிய மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாகதேடி வருகின்றனர். இதன் பலனாக நூற்றுக்கணக்கானோர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இன்னும் சிலரை காணவில்லை. அவர்களில் பலர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனிடையே, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயின் மன்சார் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 1990ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த 24 பேர் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடி உத்தராகண்டின் சர்தாம் யாத்திரைக்கு ஒன்றாக செல்வது என முடிவு செய்தனர். அவர்களில் பலர் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வருகின்றனர். கடந்த1ம் தேதி மும்பையில் இருந்து ரயிலில் கிளம்பி உத்தராகண்ட் சென்றனர். பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் டில்லியில் இருந்து மும்பை திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்களை மேகவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த சுற்றுபயணம் சென்ற அசோக் என்பவரின் மகன் கூறுகையில், கடைசியாக கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு பேசினோம். குழுவினர் கங்கோத்ரி நகருக்கு 10 கி.மீ., தொலைவில் உள்ளதாகவும், லேசான நிலச்சரிவு மற்றும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் பயணம் தடைபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களின் மொபைல்போனும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக தகவல் வருகிறது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: உத்தராகண்டில் சிக்கியவர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். மாநில அரசுடனும் தொடர்பில் இருக்கிறோம். மஹாராஷ்டிராவை சேர்ந்த 149 பேர் அங்கு சிக்கி உள்ளனர்.அவர்களில் 75 பேரது மொபைல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது அல்லது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என தகவல் வருகிறது எனத் தெரிவித்தார்.