ADDED : பிப் 04, 2024 12:19 AM

சண்டிகர்: பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தன் இரு பதவிகளையும் நேற்று ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக, தன் ராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பன்வாரிலால் புரோஹித் கவர்னராக உள்ளார். இதேபோல் யூனியன் பிரதேசமான சண்டிகரின் துணை நிலை கவர்னராகவும் பதவி வகித்து வருகிறார்.
முன்னதாக, தமிழக கவர்னராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோஹித், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் கவர்னராக பதவியேற்றார்.
பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு விவகாரங்களில் பஞ்சாப் மாநில அரசுக்கும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இவ்விவகாரம் உச்ச நீதிமன்றம் தலையீடு வரை சென்றது. இந்நிலையில், தன் இரு பதவிகளில் இருந்தும் விலகுவதாக பன்வாரிலால் புரோஹித் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், 'தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தனிப்பட்ட பொறுப்புகளை கவனிக்கவும் பஞ்சாப் கவர்னர் பதவியையும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். எனவே, என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று முன்தினம் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், மறுநாளே தன் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.