புஷ்பா 2 - நெரிசல் விவகாரம் மனித உரிமை ஆணையம் அதிரடி
புஷ்பா 2 - நெரிசல் விவகாரம் மனித உரிமை ஆணையம் அதிரடி
ADDED : ஜன 02, 2025 11:55 PM

புதுடில்லி: நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2: தி ரூல் என்ற படத்தின் சிறப்புக் காட்சியின்போது, தெலுங்கானாவின் ஹைதராபாதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறப்பு காட்சிக்கு முன் அறிவிப்பின்றி வந்ததாக கூறி, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அடுத்த நாளே அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், கடந்த மாதம் புகார் செய்தனர்.
அதில், 'படத்தின் சிறப்புக் காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது, அவருடன் வந்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், கூட்டம் அங்கும் இங்கும் சிதறி ஓடியது. இதனால் உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட்டன. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
படத்தின் சிறப்புக் காட்சியின் போது, தவறான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

