தள்ளு...தள்ளு...தள்ளு... : போலீஸ் வாகனத்தை தள்ளிய பீகார் கைதிகள்
தள்ளு...தள்ளு...தள்ளு... : போலீஸ் வாகனத்தை தள்ளிய பீகார் கைதிகள்
ADDED : பிப் 04, 2024 08:57 PM

பாட்னா: போலீஸ் வாகனத்தில் டீசல் இல்லாததால் கைதிகள் வண்டியை தள்ளி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் மது அருந்தியதாக சிலரை போலீசார் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் தங்களுடைய வாகனம் மூலம் அழைத்து சென்றனர். கைதிகளுக்கு பாதுகாப்பாக இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசார் உடன் சென்றனர். கச்சாஹரிசெளக் என்ற இடம் சென்ற போது வாகனம் திடீரென நின்று போனது. நின்றதற்கான காரணத்தை ஆராய்ந்த போது வாகனத்தில் எரிபொருள் தீர்ந்து போனது தெரியவந்தது.
வாகனம் நின்ற இடத்திற்கும் கோர்ட்டிற்கும் இடைப்பட்ட தூரம் அரை கிலோமீட்டர். உடனடியாக போலீசாருக்கு சமயோசித திட்டம் உருவானது. இதனையடுத்து கைதிகள் அனைவரும் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் கயிற்றால் இடுப்பு பகுதியுடன் சேர்த்து கட்டப்பட்டனர். பின்னர் கைதிகள் வாகனத்தை தள்ளி விட பணிக்கப்பட்டனர். கைதிகள் வாகனத்தை தள்ளி செல்லும் போது போலீசார் அவர்கள் கண்காணித்த படியே பின் தொடர்ந்து செல்கின்றனர்.
இது குறித்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.