அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டாததால் ஈரான் மீது ஐ.நா., பொருளாதார தடை
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டாததால் ஈரான் மீது ஐ.நா., பொருளாதார தடை
ADDED : செப் 28, 2025 11:53 PM

டெஹ்ரான்: ஈரான் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டாத காரணத்தால், அதன் மீது ஐ.நா., 2015க்கு முன் விதித்த பொருளாதார தடையை நேற்று அதிகாலை முதல் மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரான், 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன.
கைவிட மறுப்பு அ தன் பின், 2018ல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் முதல் பதவிக் காலத்தில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்.
அதன்பின் ஈரான் தன் விருப்பம் போல் அணு உற்பத்தியில் இறங்கியது. அணுசக்திக்கான முக்கிய தனிமமான யுரேனியத்தை அணு ஆயுத தரத்துக்கு செறிவூட்டியதாக புகார் எழுந்தது.
இது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கடந்த ஜூலையில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது. அவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும் உதவினார். 12 நாட்களுக்கு பின் இந்த மோதல் நின்றது. இந் நிலையில், ஈரானை புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்பட வைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் தந்தன.
இது தொடர்பாக பேச்சும் நடந்தது. ஆனால் அணுசக்தி உற்பத்தி மக்கள் நலனுக்கானது, அதை கைவிட முடியாது என ஈரான் அறிவித்தது.
பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததால், ஐ.நா.,வின் பொருளாதார தடை நேற்று அதிகாலை முதல் மீண்டும் அமலுக்கு வந்தது. இதற்கான தீர்மானத்தை 'வீட்டோ' எனப்படும் சிறப்பு அதிகாரம் கொண்டு தோற்கடிக்க முடியாது.
வர்த்தகம் தடைபடும் மீண்டும் பொருளாதார தடை அமலுக்கு வந்ததால், ஈரான் அரசு மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படும்.
ஈரானுடனான சர்வதேச ஆயுத ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும். வர்த்தகம் தடைபடும்.
ஈரானில் ஏற்கனவே போர் மற்றும் பொருளாதார தடைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பண மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்நிலையில், ஐ.நா.,வின் பொருளாதார தடை நிலைமையை இன்னும் மோசமாக்கும் என அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பதிலடி குறித்து ஆலோசனை
ஐ.நா., மீண்டும் பொருளாதார தடை விதித்தது தொடர்பாக ஈரான் பார்லிமென்ட்டில் சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறியதாவது:
ஐ.நா.,வின் இந்த சட்டவிரோத தீர்மானங்களின் அடிப்படையில், எங்கள் மீது எந்த நாடும் நடவடிக்கை எடுத்தால், ஈரானிடமிருந்து கடுமையான பதிலை சந்திக்க வேண்டி வரும். இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் துவங்கிய பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளும் எங்கள் எதிர்வினையை எதிர்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.