ADDED : ஜன 31, 2024 07:40 AM

பெங்களூரு : ''மாண்டியா கெரேகோடுவில் நடந்த பிரச்னைக்கு, நான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால், என்னை துாக்கில் போடுங்கள்,'' என, மாநில அரசுக்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி சவால் விடுத்து உள்ளார்.
மாண்டியா கெரேகோடுவில் ஹனுமன் கொடி இறக்கப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்னைக்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி தான் நேரடி காரணம் என்று, அமைச்சர் செலுவராயசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு குமாரசாமி பதிலடி கொடுத்து உள்ளார்.
பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் சமீப காலமாக உணர்ச்சிபூர்வமான, சம்பவங்கள் நடக்கின்றன. இதுபற்றி ஊடகங்கள் முன், நான் எதுவும் பேசவில்லை.
மாண்டியா கெரேகோடில் நடந்த உணர்ச்சிபூர்வமான சம்பவத்திற்கு, கர்நாடக அரசின் தவறான நடவடிக்கையே காரணம். இந்த பிரச்னையில் என் மீது அமைச்சர் செலுவராயசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மாண்டியா மக்களுக்கு எதிராக, நான் செயல்படுவதாக கூறி உள்ளார். கெரேகோடு பிரச்னைக்கு நான் காரணம் என்று நிரூபித்தால், என்னை துாக்கில் போடுங்கள். பிரச்னைக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. அரசின் தோல்வியை மறைக்க, என் மீது பழி போடுகின்றனர்.
காவி சால்வை அணிந்து, போராட்டத்தில் பங்கேற்றது தவறா. ஒரு தலித் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, நீல நிற சால்வை அணிந்தேன்.
விவசாயிகள் பிரச்னையில் பங்கேற்றபோது, பச்சை துண்டு அணிந்தேன். காவி சால்வை குறித்து, காங்கிரசாருக்கு குறுகிய மனப்பான்மை உள்ளது. எனக்கு சான்றிதழ் கொடுக்க, செலுவராயசாமிக்கு தகுதி இல்லை.
மாண்டியாவில் வெற்றி, தோல்வியை சந்தித்து உள்ளோம். ஆனாலும் மக்கள் எங்களுடன் உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதலில் எப்படி பேச வேண்டும் என்று கட்சி கற்றுத் தரட்டும். கொடிக்கம்பம் அமைத்து, ஹனுமன் கொடி ஏற்ற அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தில், அரசு திருத்தம் செய்து உள்ளது.
கடந்த 1989ல் ராம்நகர் காங்கிரசால் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சமூகத்தை சீரழித்தது காங்கிரஸ் தான்.
மாண்டியா மாவட்டத்தில், 1 லட்சம் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவோம் என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா கூறி உள்ளார். அதற்கு நாங்கள் துணையாக இருப்போம்.
தற்போதைய காங்கிரஸ்காரர்கள், கிழக்கிந்திய கம்பெனியினர் மனநிலை கொண்டவர்கள். மாண்டியா காவல் துறையினர், அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர். இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்புவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.