ADDED : ஜன 28, 2025 08:05 PM
புதுடில்லி:புதுடில்லி தொகுதியில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித்தை ஆதரித்து, லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் ஊழியர்களுடன் ராகுல் உரையாடினார். முன்னதாக, மகரிஷி வால்மீகி கோவிலில் ராகுல் பிரார்த்தனை செய்தார்.
சுவாமி தரிசனத்துக்கு பின், நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது:
கோவில் அருகிலுள்ள காலனியில் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் ஊழியர்களைச் சந்தித்தேன். மத்திய பா.ஜ., அரசு மற்றும் டில்லியில் ஆம் ஆத்மி அரசின் தனியார்மயமாக்கல் மற்றும் ஒப்பந்த வேலை கொள்கைகளால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக கூறினர். அதேபோல, சம்பளமும் உரிய நாளில் கிடைப்பதில்லை என்றனர். இந்தப் பிரச்னையை தொடர்ந்து பேசுகிறோம். தனியார்மயமாக்கல் மற்றும் ஒப்பந்த முறை பணி ஆகியவை ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கும் ஆயுதங்கள். லோக்சபாவில் இந்த விவகாரத்தை எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வால்மீகி காலனி, மந்திர் மார்க் பகுதியில் பொது மக்கள் ராகுலுக்கு தலைப்பாகை அணிவித்தனர். கோல் மார்க்கெட்டிலும் வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.
புதுடில்லி தொகுதியில் பா.ஜ., சார்பில் பர்வேஷ் வர்மா, காங்கிரசில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் மற்றும்ன் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

