இந்தியாவுக்கு எதிராக சதி செய்யும் ராகுல்; பாஜ குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு எதிராக சதி செய்யும் ராகுல்; பாஜ குற்றச்சாட்டு
ADDED : டிச 20, 2025 05:10 PM

புதுடில்லி: வெளிநாட்டு பயணங்களின் போது நாட்டின் நலன்கள் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களை சந்தித்து காங்கிரஸ் எம்பி ராகுல் சதி செய்வதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜ தலைவர் கவுரவ் பாட்டியா கூறியதாவது; காங்கிரஸ் எம்பி ராகுல் தனது வெளிநாட்டு பயணத்தின் போதெல்லாம், இந்தியாவை அவமதிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை சந்தித்து, தேசிய நலன்களுக்கு எதிராக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய செயல்களை ராகுலை தவிர வேறு எந்த இந்தியத் தலைவர்களும் செய்வதில்லை. இது மிகவும் கவலைக்குரிய செயல். ராகுலின் இதுபோன்ற செயல்பாடுகள் இந்திய குடிமகன்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்லி கூட்டத்தொடரின் போதே ராகுல் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார். பார்லிமென்டில் இருக்க வேண்டியது எதிர்க்கட்சி தலைவரின் முக்கிய கடமையாகும். தற்போது, ஜெர்மனி சென்றுள்ள அவர், ஹெர்ட்டி பள்ளிக்கு சென்று அங்குள்ள பேராசிரியர் கார்னேலியா வோலை சந்தித்து பேசியுள்ளார். இது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழச் செய்கிறது.
ராகுல் வெளிநாடு செல்லும் போது எல்லாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள், இந்திய நலன்கள் மற்றும் ஒருமைப்பாட்டை விரும்பாதவர்களை சந்தித்து உறவாடுகிறார். இது எந்த மாதிரியான இந்திய எதிர்ப்பு கொள்கை எனத் தெரியவில்லை. இதுபோன்ற இந்தியாவுக்கு எதிரான சக்திகளை சந்தித்து சதி செய்கிறார், இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

