'மிஸ் இந்தியா' பட்டியலில் ஏன் அவங்க இல்லை; கேட்கிறார் ராகுல்
'மிஸ் இந்தியா' பட்டியலில் ஏன் அவங்க இல்லை; கேட்கிறார் ராகுல்
ADDED : ஆக 25, 2024 07:10 AM

லக்னோ: 'மிஸ் இந்தியா பட்டியலில், தலித் அல்லது பழங்குடியின பெண்கள் யாருமே இல்லை' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த 'சம்விதன் சம்மான் சம்மேளன்' மாநாட்டில் ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அடித்தளம். நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்துவோம். இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம்.
எந்தெந்த அரசு அமைப்புகளில், எந்த ஜாதிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்று முதலில் தரவுகள் சேகரிக்க வேண்டும். 90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வியறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பில்லை. இந்த மக்களின் நலனுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
மிஸ் இந்தியா
மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்களின் பட்டியலில், தலித் அல்லது பழங்குடியின பெண் யாராவது இருப்பார்களா என்று பார்த்தேன். ஆனால், தலித், பழங்குடியினர் அல்லது ஓ.பி.சி., பிரிவினரை சேர்ந்த பெண்கள் ஒருவர் கூட இல்லை.
தொழிலாளர்கள், விவசாயிகள் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை. அதிகாரத்துவம், நீதித்துறை மற்றும் ஊடகங்களில் ஓ.பி.சி.,க்கள், தலித்துகள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதை கண்டறிய வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

