சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு என்று ராகுல் கூறுவது அபத்தம்
சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு என்று ராகுல் கூறுவது அபத்தம்
UPDATED : ஜூன் 08, 2025 06:37 AM
ADDED : ஜூன் 08, 2025 12:59 AM

புதுடில்லி: 'மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக காங்., - எம்.பி., ராகுல் புகார் கூறுவது, முற்றிலும் அபத்தமானது' என கூறிய தலைமை தேர்தல் கமிஷன், 'வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், சட்டத்தின் ஆட்சிக்கு அவமானம்' என்றும் கூறியது.
மஹாராஷ்டிராவில் 2024 நவம்பரில், 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி, 235 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
பா.ஜ., 132 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ், முதல்வராக பதவியேற்றார். ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்களாகினர்.
கட்டுரை
காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார். இதை, தலைமை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து, 'மேட்ச் பிக்சிங் மஹாராஷ்டிரா' என்ற பெயரில், ஆங்கில நாளிதழில் ராகுல் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், மேட்ச் பிக்சிங் செய்து பா.ஜ., வெற்றி பெற்றதாகவும், தேர்தல்களில் எப்படி முறைகேடு செய்ய வேண்டும் என்ற வரைபடம் அக்கட்சியிடம் இருப்பதாகவும், பீஹாரில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் இதே பாணியை பா.ஜ., பின்பற்ற உள்ளதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும், தேர்தலில் பா.ஜ., எப்படி முறைகேடு செய்கிறது என்பது குறித்த விபரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
தேர்தல் கமிஷனின் நியமன குழுவை திருத்த வேண்டும்
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டும்
ஓட்டுப்பதிவை அதிகரித்தல்
பா.ஜ., வெற்றி பெற வேண்டிய இடங்களில் போலி ஓட்டுகளை பதிவு செய்து ஆதாரங்களை மறைப்பது.
கேள்வி
இது தான் தேர்தல் மோசடியின் படிநிலைகள் என ராகுல் குறிப்பிட்டு உள்ளார்.
''தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
''நடுநிலை நடுவரை நீக்கி, தங்களுக்கு சாதகமாக ஒருவரை பா.ஜ., நியமித்துள்ளது. நிலைமை இப்படி இருக்கையில், எப்படி தேர்தல்கள் நியாயமாக நடக்கும்?'' என, ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏற்கனவே பல முறை விளக்கம் அளித்து விட்டோம். பாதகமான தீர்ப்புக்கு பின், தேர்தல் கமிஷனை அவதுாறு செய்வது முற்றிலும் அபத்தமானது.
தவறான தகவல்களை பரப்புவது, தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு சமம். மேலும், அயராது பணியாற்றிய தேர்தல் கமிஷன் ஊழியர்களையும் அவமதிப்பதாகும்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, காங்., வேட்பாளர்களோ அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ, எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியல் தொடர்பாக காங்., உள்ளிட்ட எந்த கட்சிக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை.
தோல்வி அடைந்த பின், அவதுாறு பரப்புவதை எப்படி ஏற்க முடியும்? மஹாராஷ்டிராவின் வாக்காளர் பட்டியலுக்கு எதிராக எழுப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், சட்டத்தின் ஆட்சிக்கு அவமானம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போலி கதைகள்!
தொடர்ச்சியாக சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட சோகம் மற்றும் விரக்தியால், போலி கதைகளை உருவாக்கி, ராகுல் கட்டுரை எழுதி உள்ளார். தோல்விக்கான காரணங்களை அறியாமல், வாய்க்கு வந்தபடி அவர் உளறி வருகிறார். பீஹார் சட்டசபை தேர்தலிலும் தோற்று விடுவோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனாலேயே, எந்த ஆதாரமுமின்றி அவர் பேசி வருகிறார்.
- நட்டா,
மத்திய அமைச்சர், பா.ஜ.,