தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ வெளியாகாத புத்தகம் குறித்து ராகுல் பேசியதால் கடும் அமளி

 வெளியாகாத புத்தகம் குறித்து ராகுல் பேசியதால் கடும் அமளி

 வெளியாகாத புத்தகம் குறித்து ராகுல் பேசியதால் கடும் அமளி


UPDATED : பிப் 03, 2026 11:10 AM

ADDED : பிப் 03, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2026 11:10 AM ADDED : பிப் 03, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது, முன்னாள் ராணுவ தளபதி எழுதி, வெளியாகாத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வாசிக்க முற்பட்டார்.

இதனால், பா.ஜ., - காங்கிரஸ் எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவில் நடைபெற்ற ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் மீது, நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:

பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, எங்களின் நாட்டுப்பற்று குறித்தும், இந்திய கலாசாரம் பற்றிய எங்களது புரிதல் குறித்தும் சில விஷயங்களை கூறினார். அதற்காக சில வரிகளை, வாசித்துக் காட்ட விரும்புகிறேன்.

கொதிப்பு

என் கையில் உள்ள இந்த ஆவணம், நம் ராணுவத்தின் முன்னாள் தளபதி நரவனேயின் நினைவுக் குறிப்புகள் பற்றியது. அதில், அவர் கூறியிருப்பதை வாசிக்கிறேன். அதை கவனமாக கேட்டால், அப்போது தெரியும், யார் தேசப்பற்று மிக்கவர்கள் என்று, இவ்வாறு ராகுல் பேசத் துவங்கியதும், பா.ஜ., - எம்.பி.,க்கள் கொதித்து எழுந்தனர்.

ராகுலை நோக்கி கடுமையான முழக்கங்கள் எழுப்பினர். 'தன் பேச்சுக்கு ஆதாரத்தை காட்டுவாரா ராகுல்' என்று கடுமையாக சாடினர். அப்போது ராகுலின் பேச்சை இடைமறிப்பதை கண்டித்து, காங்., - எம்.பி.,க்களும் கோஷங்கள் போடவே, சபையில் பெரும் அமளி உருவானது.

அப்போது பேசிய, பா.ஜ.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ''எதிர்க்கட்சித் தலைவர், எந்த அடிப்படையில் இவ்வாறு பேசுகிறார்; அதற்கான ஆதாரங்கள் என்ன? ஏதோ ஒரு புத்தகத்தை துாக்கி வந்து, அதில் இவ்வாறு கூறியிருப்பதாக சபையில் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

''ராகுல் கூறுவது உண்மையாக இருந்தால், அந்த புத்தகத்தை சபையில் சமர்ப்பிக்க வேண்டும். அவரால் முடியாது; காரணம், அவர் குறிப்பிடும் புத்தகம் இன்னும் வெளியிடப்படவே இல்லை. வெளியிடப்படாத ஒரு புத்தகத்தில் உள்ள வாசகங்களை, இங்கு கொண்டு வந்து, அவதுாறு பரப்பக் கூடாது,'' என்றார்.

ஆதாரங்கள்

அதற்கு ராகுல், ''நான் உறுதியான ஆதாரங்க ளின் அடிப்படையில்தான் பேசுகிறேன். காரணம், இந்த விஷயங்கள் அனைத்தையும், 'கேரவன்' என்ற புலனாய்வு இதழும் வெளியிட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் முதல் 2022 ஏப்ரல் வரையில் இந்திய ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் நரவனே கூறியதைத்தான், அந்த இதழ் கூறியுள்ளது,'' என்றார்.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா தலையிட்டு, ''பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை கொண்டு வந்து சபையில் பேசக்கூடாது. வெளியிடப் படாத புத்தகத்தில் உள்ள விஷயங்களை குறிப்பிடுவதற்கு, சபையின் விதிகளில் அனுமதி இல்லை. ஜனாதிபதி உரையின் மீது எவ்வளவு வேண்டுமானாலும் பேசுங்கள். அரசின் திட்டங்கள், நிறை குறைகள் குறித்து தாராளமாக விமர்சியுங்கள்; தவறில்லை. ஆனால் சபை விதிகளுக்கு முரணாக பேச அனுமதிக்க முடியாது,'' என்று கூறியதும், காங்., - எம்.பி.,க்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர்.

பின்னர் ராகுல், ஒரு கதை சொல்லும் பாணியில், குறும்பாக பேசியதும், மீண்டும் ரகளை கிளம்பியது.

அப்போது, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, ''சபையில் பேசக்கூடாத விஷயங்கள் குறித்து சபாநாயகர் கூறிய பிறகும், ராகுல் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, சபாநாயகரின் தீர்ப்பை மதிக்காதவரை, என்ன செய்யலாம் என்பது குறித்து, இந்த சபையில் விவாதம் நடத்த வேண்டும்,'' என்றார்.

இது, காங்கிரஸ் எம்.பி.,க்களை மேலும் கோபப்படுத்தியது. சீனாவுடனான விவகாரத்தை ராகுல் பேசியதும் மீண்டும் ரகளை ஆரம்பமானது.

அதற்கு ராகுல், ''இந்தியா - சீனா உறவு குறித்து பேசவே கூடாது என்று எந்த விதி கூறுகிறது என்பதை சபாநாயகர் கூற வேண்டும். இதோ இந்த செய்தி, பிரதமரின் நடத்தை குறித்து எழுதப்பட்டுள்ளது,'' என்று ராகுல் கூறியதும், கடும் ரகளை ஏற்பட்டு உடனடியாக சபை ஒத்திவைக்கப்பட்டது.

மாலை 4:00 மணிக்கு மீண்டும் சபை கூடியபோது, ''என்னை பேச விடவில்லை எனும்போது, பிரதமருக்கு பெரும் சங்கடம் இருப்பதாக தெரிகிறது,'' என்றதும், அமளி அதிகமாகி, லோக்சபா நாள் முழுவதுமாக முழுதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

என்ன புத்தகம் அது?

ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற புத்தகத்தை குறிப் பிட்டே ராகுல் நேற்று பார்லிமென்டில் பேசினார். நரவனே, தன் குழந்தை பருவம் முதல் ராணுவ வாழ்க்கை வரையிலான அனுபவங்களை தொகுத்து, 448 பக்க புத்தகமாக எழுதியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டே வெளியாக வேண்டிய அந்த புத்தகம், ராணுவ அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், அந்த புத்தகத்தில், 2020ல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல், சீன ராணுவம் அத்துமீறி நம் நாட்டுக்குள் நுழைந்தது போன்ற பல்வேறு தகவல்களை நரவனே விவரித்துள்ளதாக, 'கேரவன்' என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.



- நமது டில்லி நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us