டில்லி தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவாலை விளாசினார் ராகுல்!
டில்லி தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவாலை விளாசினார் ராகுல்!
ADDED : ஜன 28, 2025 09:22 PM

புதுடில்லி:டில்லி தேர்தல் பிரசாரத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை சரமாரியாக விளாசினார்.
டில்லியில் நடக்கும் சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன.
இன்று மேற்கு வினோத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசியதாவது:
கெஜ்ரிவால் தன் மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்வார். அவர் அரசியலுக்கு வரும்போது சிறிய கார் மட்டுமே வைத்திருந்தார். நான் புதிய வகையிலான அரசியல் செய்வேன் என்று உறுதி அளித்தார். டில்லியை மாற்றிக்காட்டுவேன் என்று கூறினார்.
ஆனால், டில்லியின் ஏழை மக்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர் இங்கு இல்லை. கலவரம் நடந்தபோதும் அவர் இல்லை.
தூய்மையான அரசியல் செய்வேன் என்றெல்லாம் கூறினார். ஆனால், மிகப்பெரிய மதுபானக் கொள்கை மோசடி டில்லியில் நடந்தது தான் கண்ட பலன்.
நீங்கள் அவரது வீட்டின் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அவர் ஒரு அரண்மனையில் தங்கி இருக்கிறார். ஷீஸ் மஹால் என்பது அதன் பெயர்.
இவ்வாறு ராகுல் பேசினார்.
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் 'இண்டியா' என்ற பெயரில் ஒரே கூட்டணியில் இணைந்திருந்தன. இப்போது கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும், ஆளுக்கொரு திசையில் செல்கின்றன; ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

