ADDED : ஏப் 27, 2025 12:48 AM

புனே: சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பற்றி அவதுாறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், வரும் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ல் மார்ச் மாதம் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான ராகுல் பேசுகையில், சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். ராகுலின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சாவர்க்கரின் உறவினர் சத்யாகி என்பவர் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் பவார், ''சாவர்க்கர் பற்றி ராகுல் தெரிவித்த கருத்து, வரலாற்று உண்மைகள் அடிப்படையிலானது. எனவே, அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, இவ்வழக்கு தொடர்பான ராகுலின் வாதங்களை, அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்வைக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

