sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொய் ஆதாரங்களால் பரிதவிக்கும் ராகுல்; பிசுபிசுக்கும் 'ஓட்டு திருட்டு' நாடகம்

/

பொய் ஆதாரங்களால் பரிதவிக்கும் ராகுல்; பிசுபிசுக்கும் 'ஓட்டு திருட்டு' நாடகம்

பொய் ஆதாரங்களால் பரிதவிக்கும் ராகுல்; பிசுபிசுக்கும் 'ஓட்டு திருட்டு' நாடகம்

பொய் ஆதாரங்களால் பரிதவிக்கும் ராகுல்; பிசுபிசுக்கும் 'ஓட்டு திருட்டு' நாடகம்

58


UPDATED : ஆக 20, 2025 03:16 AM

ADDED : ஆக 20, 2025 12:17 AM

Google News

58

UPDATED : ஆக 20, 2025 03:16 AM ADDED : ஆக 20, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 2014 முதல் பார்லிமென்ட் மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., தொடர் வெற்றிகளை குவிக்கும் போதெல்லாம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்தே பா.ஜ., வெற்றி பெறுவதாக குற்றஞ்சாட்டுவதை காங்கிரஸ் வழக்கமாக வைத்திருந்தது.

அது எதிர்பார்த்த அளவுக்கு எடுபடாமல் போனதை அடுத்து, புதிது புதிதாக காரணங்களை தேட துவங்கியது. அதில் சமீபத்தில் அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான், 'ஓட்டு திருட்டு' என்ற சொல்லாடல்.

பீஹாரில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி துவங்கிய பின், ஓட்டுகள் திருடப்படுவதாக ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால், இது தொடர்பாக அவர் சமர்ப்பிக்கும் ஆதாரங்கள் வலுவற்றதாகவே இருக்கின்றன.

அது குறித்து, 'ஸ்வராஜ்ஜியா' இதழ் வெளியிட்டுள்ள விரிவான பார்வை இதோ:

2 மாநிலங்கள்: ஒரே கதை கடந்த 7ம் தேதி நிருபர்களை சந்தித்த ராகுல், வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் ஓட்டு திருட்டு நடந்திருப்பதாக, தேர்தல் கமிஷன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார்.

லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் இடையே வாக்காளர்களை சேர்ப்பது என்பது வழக்கமான நடைமுறை தான். அது ஜனநாயக நடைமுறையும் கூட.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் வாக்காளர்கள் எண்ணிக்கை 4.4 சதவீதம் அளவுக்கு எப்படி அதிகரிக்கலாம் என, ராகுல் கேள்வி கேட்கிறார்.

மஹாராஷ்டிராவில் கடந்த 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டசபை தேர்தல்களில் முறையே 4.7 மற்றும் 4.1 சதவீத அளவுக்கு வாக்காளர்கள் அதிகரித்திருந்தனர். அப்போது கிடைத்த வெற்றியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டது.

இப்போது, வாக்காளர் எண்ணிக்கை 4.4 சதவீதம் அதிகரித்து இருப்பது ராகுலின் கண்களை உறுத்துகிறது. அப்படியானால், அதிக அளவில் ஓட்டு போடுவதற்கு மக்கள் முன் வந்தால் ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல என்கிறாரா?

நம் ஜனநாயக அமைப்புகள் எப்போதுமே துல்லியமான கணக்குகளை காட்டவே பாடுபட்டு வருகின்றன. ஆனால், 'ஓட்டு திருட்டு' என்பதை நிரூபிக்க சில பொய்யான புள்ளி விபரங்கள் காட்டப்படுகின்றன. இது நம் ஜனநாயக அமைப்புகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

மஹாராஷ்டிராவில் தேர்தலுக்காக போலி பெயர்களில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் குற்றஞ்சாட்டுகிறார். அங்கு, ஓட்டளிக்க தகுதி வாய்ந்தவர்களின் மொத்த மக்கள் தொகை 9.54 கோடி. ஆனால், வாக்காளர் பட்டியலில் 9.70 கோடி பேர் இருப்பதாக கூறுகிறார்.

மஹாராஷ்டிராவில் ஓட்டளிக்க தகுதி வாய்ந்தவர்களின் எண்ணிக்கை உண்மையிலேயே 9.54 கோடி தானா? அது உண்மையெனில், அந்த தகவலை அவர் எங்கிருந்து திரட்டினார்?

மக்கள் தொகை கணக் கெடுப்பை பொறுத்தவரை, அது அரசின் கைகளில் இருக்கிறது. தனியாரின் கைகளில் இருக்காது. அப்படி எனில், ராகுல் சொன்ன கணக்கை எப்படி உண்மை என நம்ப முடியும்.

ஆபத்தான குற்றச்சாட்டு மஹாராஷ்டிராவில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான போதோ, அல்லது அதற்கு சில நாட்கள் கழித்தோ கூட காங்கிரசின் பூத் ஏஜென்டுகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எந்த புகாரையும் எழுப்பவில்லை. ஆனால், எட்டு மாதங்கள் கழித்து தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் கூறுவது வேடிக்கை.

தேர்தலில் முறைகேடுகள் நடந்திருந்தால், ஓட்டுப்பதிவு முடிந்த கையோடு காங்கிரஸ் ஏஜென்டுகள் அவ்வளவு எளிதாக 17சி படிவத்தில் கையெழுத்திட்டிருக்க மாட்டார்கள். முறைகேடு நடந்ததாக அப்போது எந்த முணுமுணுப்பும் இல்லை.

ஓட்டுப்பதிவின் போது, கடைசி நேரத்தில் தான் அதிக அளவில் ஓட்டுகள் பதிவானது என்ற ராகுலின் குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லை.

மாலை 5:00 மணிக்கு முன் வரை, ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 58 லட்சம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. மாலை 5:00 மணிக்கு பின், ஒரு மணி நேரத்திற்கு 32.5 லட்சம் ஓட்டுகளே பதிவானதாக தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.

இதனால், இந்த குற்றச்சாட்டும் எடுபடவில்லை. தேர்தல் கமிஷன் மீது ராகுல் வைக்கும் குற்றச்சாட்டுகள் சர்ச்சையானது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட. உண்மைகளை மட்டும் அவர் திசை திருப்பவில்லை; சட்டத்தையும் தவறாக சித்தரிக்க பார்க்கிறார்.

காங்., கொண்டு வந்த சட்டம் ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிடக் கூடாது என, சட்டமே இருக்கிறது. அதற்கான மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, என்பதை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்.

நக்சல் பாதிப்புள்ள பகுதிகள், காஷ்மீர் போன்ற இடங்களில் வாக்காளர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் காட்சிகள், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்கு அப்படியே இருக்கும். எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்தவரும் முறையாக நீதிமன்ற உத்தரவுடன் அந்த காட்சியை பெற்றுக் கொள்ளலாம்.

அப்படியிருக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கூட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பெற ஏன் முயற்சிக்கவில்லை.

கர்நாடகாவில் நாடகம் அடுத்து கர்நாடகாவிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டுகிறார். இதற்கு ஆதாரம் கேட்டு அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 'காங்கிரஸ் ஆட்சியில் தானே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது' என கேட்ட கர்நாடக காங்கிரஸ் அமைச்சராக இருந்த ராஜண்ணா, தற்போது பலிகடா ஆக்கப்பட்டார்.

ஆதாரத்தில் உண்மை இருக்குமானால், பிரமாண பத்திரத்தில் கையெழுத்திடுங்கள் என தேர்தல் ஆணையம் கேட்டதற்கும், ராகுல் வாயே திறக்கவில்லை.

காங்கிரஸ் தோல்வியை தழுவும் போதெல்லாம், போலி வாக்காளர்கள் சேர்ப்பு என்ற குற்றச்சாட்டுகளுடன் ஆஜராகி விடுகிறார் ராகுல். அதே சமயம், வெற்றி பெற்றுவிட்டால் போதும், மிக சவுகரியமாக ஊமையாகி விடுகிறார்.

காங்கிரஸ் பலமாக இருக்கும் பெங்களூரு மத்திய தொகுதியே அதற்கான சாட்சியாக இருக்கிறது.

சிவாஜி நகர் மற்றும் சாம்ராஜ்பேட்டையில் தான் போலி வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார் ராகுல். அந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றிருக்கிறது.

அப்படியெனில், காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட வாக்காளர் பட்டியலை, தற்போது திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தமா?

தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும் என, ராகுல் உண்மையிலேயே விரும்பினால், முதலில் அவர் தான் மாநில அளவிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு உரக்க குரல் எழுப்ப வேண்டும். ஆனால், அதை செய்யாமல், தேர்தல் கமிஷன் மீதே புகார் தெரிவிக்கும் வகையில் கூச்சலிடுகிறார்.

பீஹார் பகீர் பீஹார் முழுதும், 17,000 பூத் ஏஜென்டுகளை வைத்திருக்கிறது காங்கிரஸ். வாக்காளர் பட்டியலில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க, களத்தில் அடிமட்டத்தில் இருந்து இவர்கள் வேலை பார்ப்பர். முறைகேடுகளை தவிர்க்க, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது இவர்களுக்கும் தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்திருந்தது.

உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலோ, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டாலோ ஆட்சேபம் தெரிவிக்கலாம் என, தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

ஆனால், இதுவரை காங்கிரசின் ஒரு பூத் ஏஜென்டிடம் இருந்து கூட இதற்கு ஆட்சேபனை எழவில்லை. அவர்களின் இந்த மவுனமே உண்மை என்ன என்பதை உணர்த்துகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியால், இத்தனை ஆண்டுகளாக போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்த சில தொகுதிகளில், தோல்வியை தழுவக் கூடும் என்ற உண்மையை உணர்ந்ததால் தான் ராகுல் இப்படி பரிதவிக்கிறார்.

பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி என்பது போலிகளை களையெடுக்கும் அற்புதமான நடவடிக்கை. இது நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்கான சிறந்த செயல் திட்டம்.

வாக்காளர் பட்டியலில் நடந்த களையெடுப்பு வெகு விரைவில் காங்கிரசுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். அதன் காரணமாகவே ஓட்டு திருட்டு என்ற நாடகத்தை ராகுல் தற்போது அரங்கேற்றி வருகிறார்.

பீஹாரில் நடந்தது போல நாட்டின் பிற மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தால் என்ன ஆகும் என்பது தான் ராகுலுக்கு இப்போது இருக்கும் மிகப் பெரிய கவலை.

அதனால் தான், எதையாவது செய்து இதை தடுக்க முற்படுகிறார். அந்த நாடகத்தின், 'கிளைமேக்ஸ்' தான் ஓட்டு திருட்டு.






      Dinamalar
      Follow us