மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ராகுல் பேச்சும், மத்திய அமைச்சர் பதிலடியும்!
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ராகுல் பேச்சும், மத்திய அமைச்சர் பதிலடியும்!
ADDED : மார் 18, 2024 02:27 PM

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியிருந்தார். இதற்கு, ‛‛ஒரு பொய்யை 100 முறை சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைக்கிறார்'' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
சக்திக்கு எதிராக போராட்டம்
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு விழாவில் காங்.,எம்.பி ராகுல் பேசியதாவது:
இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது. ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடுகிறோம். அது என்ன சக்தி என்பது கேள்வி. ராஜாவின் ஆன்மா மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது உண்மை. இவ்வாறு ராகுல் பேசியிருந்தார்.
மத்திய அமைச்சர் பதிலடி
இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்து மதத்தில் ஒரு சக்தி உள்ளது என ராகுல் கூறுகிறார். உச்சநீதிமன்றம் கண்டித்தாலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் அதானி குறித்து ராகுல் பேசுகிறார். குழந்தைகளைப் போல் அவர் பேசி வருகிறார்.
ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைக்கிறார். இது பிரதமர் மோடியின் அரசு. அவரது சம்பளக் கணக்கில் என்ன பணம் வந்தாலும் அது ஏழை மக்களுக்கே செல்கிறது. பிரதமர் மோடி பெயரில் வாகனமும், நிலமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

