ராகுலின் ஹிந்து விரோத பேச்சு: நிர்மலா சீதாராமன் கண்டனம்
ராகுலின் ஹிந்து விரோத பேச்சு: நிர்மலா சீதாராமன் கண்டனம்
UPDATED : ஜூலை 01, 2024 05:01 PM
ADDED : ஜூலை 01, 2024 04:22 PM

புதுடில்லி: ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் கூறியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார்.
லோக்சபாவில் விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், ''பிரதமர் மோடி ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல'' எனப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடி, ''ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மீதான தாக்குதல். ஹிந்துக்களை வன்முறையாளராக காட்ட ராகுல் முயற்சிக்கிறார்'' எனக் கண்டனம் தெரிவித்தார். மேலும், அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., எம்.பி.,க்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் கூறியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டதாவது: தன்னை ஹிந்து என சொல்லிக்கொள்ளும் ராகுல், அத்துமீறி நடந்துகொள்கிறார். இது காங்கிரசின் வெறுப்பையும், ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலையையும் காட்டுகிறது.
இண்டியா கூட்டணியின் ஹிந்து வெறுப்பையும் காட்டுகிறது. இதன்மூலம் 'அன்பு கடையை' திறந்திருக்கிறோம் எனப்பேசியவரின் போலித்தனம் வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா
இது குறித்து ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா கூறுகையில், ''எனது சகோதரர் ராகுல், ஒருபோதும் ஹிந்துக்களை அவமதிக்க மாட்டார். அவர் பா.ஜ., மற்றும் அதன் தலைவர்களைப் பற்றிதான் தெளிவாகப் பேசினார்'' என பதிலளித்தார்.