சீனாவை எதிரியாக பார்க்க கூடாதாம் மீண்டும் சர்ச்சையில் ராகுலின் நண்பர்
சீனாவை எதிரியாக பார்க்க கூடாதாம் மீண்டும் சர்ச்சையில் ராகுலின் நண்பர்
ADDED : பிப் 18, 2025 02:49 AM

புதுடில்லி: ''சீனாவை எதிரியாக பார்ப்பதை இந்தியா நிறுத்த வேண்டும்,'' என, காங்கிரஸ் கட்சியின் சர்வதேச பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும், சீனாவுக்கும் உள்ள ரகசிய உறவு பிட்ரோடாவின் இந்த பேச்சு வாயிலாக வெட்டவெளிச்சமாகி இருப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சர்வதேச பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா. அமெரிக்காவில் வசிக்கும் இவர், காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நெருங்கிய நண்பராக அறியப்பட்டவர். இவர், வாய் திறந்தாலே அது சர்ச்சையாவது வழக்கம்.
புரியவில்லை
உதாரணத்துக்கு, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் சீனர்களை போலவும், மேற்கில் வசிக்கும் மக்கள் அரேபியர்களை போலவும், வடக்கு மக்கள் வெள்ளையர்களை போலவும், தெற்கத்திய மக்கள் ஆப்ரிக்கர்களை போலவும் தோற்றம் அளிப்பதாக கடந்தாண்டு இவர் பேசியது சர்ச்சையானது.
அதை தொடர்ந்து, காங்., சர்வதேச பிரிவு தலைவர் பதவியில் இருந்து பிட்ரோடா விலகினார். சில மாதங்களில் மீண்டும் அந்த பதவி அவர் வசமானது.
இந்நிலையில், சாம் பிட்ரோடா சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
சீனாவால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறுவதை, என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அமெரிக்கா ஒரு எதிரியை வரையறுக்கும் போக்கைக் கொண்டிருப்பதால், இந்த பிரச்னை பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுவதாக நான் நினைக்கிறேன்.
அனைத்து நாடுகளும் முட்டிக்கொண்டு நிற்காமல் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சீன விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை, ஆரம்பத்திலிருந்தே மோதலைத் துாண்டும் வகையில் உள்ளது.
மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது. இது நாட்டிற்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலை மாற வேண்டும். சீனாவை எதிரியாக பார்ப்பதை இந்தியா நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மிகப்பெரிய அடி
இது, தேசிய அரசியலில் அனலை கிளப்பி உள்ளது. இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில், ''பிட்ரோடாவின் இந்த கருத்து இந்திய அடையாளம் மற்றும் இறையாண்மை மீது விழுந்துள்ள மிகப்பெரிய அடி.
''காங்கிரசார் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது புதிதல்ல. ராகுலும் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்துஉள்ளார்,'' என்றார்.
பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் துஹின் சின்ஹா கூறுகையில், ''நம் நாட்டின் 40,000 சதுர கி.மீ., பகுதியை சீனாவுக்கு தாரை வார்த்தவர்கள், அவர்களால் நமக்கு அச்சுறுத்தல் இல்லை எனக்கூறுவதில் ஆச்சரியமில்லை.
''சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2008ல் காங்., போட்ட ரகசிய உடன்படிக்கைக்கு பின் இருந்தே, அவர்கள் சீன துதிபாட துவங்கிவிட்டனர்,'' என்றார்.

