ராகுலின் நியாய யாத்திரை துவக்க நிகழ்ச்சி இடமாற்றம்
ராகுலின் நியாய யாத்திரை துவக்க நிகழ்ச்சி இடமாற்றம்
ADDED : ஜன 13, 2024 12:17 AM
இம்பால்: காங்கிரஸ் எம்.பி., ராகுல் தலைமையில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாளை துவங்க உள்ள நிலையில், அதற்கு மணிப்பூர் அரசு கட்டுப்பாடுகள் விதித்ததையடுத்து, மாற்று இடத்தில் துவக்க நிகழ்ச்சி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 2022 செப்., 7ம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில், பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் காங்., - எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரை, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற நடைபயணத்தை, நாளை ராகுல் துவங்க திட்டமிட்டு உள்ளார்.
இந்த யாத்திரையை, மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில் துவங்க, அம்மாநில பா.ஜ., அரசிடம், ஒரு வாரத்துக்கு முன், காங்., நிர்வாகிகள் அனுமதி கோரினர்.
பல்வேறு நிபந்தனைகளுடன், ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில், பாரத் ஜோடோ நியாய யாத்திரையை துவங்க, காங்கிரசுக்கு மணிப்பூர் அரசு சில கட்டுப்பாடுகளுடன் சமீபத்தில் அனுமதி வழங்கியது.
எனினும், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறைந்த எண்ணிக்கையிலான நிர்வாகிகளுடன் யாத்திரையை காங்., நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த காங்., தலைமை, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் துவக்க நிகழ்ச்சியை, மாற்று இடத்தில் நடத்த முடிவு செய்தது.
இதற்கு ஏற்ப, மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தின் கோங்ஜாம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் நடத்த காங்., அனுமதி கோரியது. இதற்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.