பாஜ மீது கேரள மக்கள் காட்டும் அன்பு: ராஜ்நாத்சிங் தெம்பு
பாஜ மீது கேரள மக்கள் காட்டும் அன்பு: ராஜ்நாத்சிங் தெம்பு
UPDATED : ஏப் 18, 2024 04:21 PM
ADDED : ஏப் 18, 2024 04:19 PM

திருவனந்தபுரம்: கடந்த 20 ஆண்டுகளாக ராகுல்யான் எங்கும் ஏவப்படவோ, தரையிறங்கவோ இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு, ராகுலுக்கு மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான தைரியம் இல்லை. அதனால் அவர் உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு இடம்பெயர்ந்து விட்டார்.
இருப்பினும் வயநாடு தொகுதி மக்கள் அவரை எம்.பி.., ஆக்க விரும்பவில்லை. நாட்டில் பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக ராகுல்யான் எங்கும் ஏவப்படவோ, தரையிறங்கவோ இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
வறுமை
இதற்கிடையே, கொல்லத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஜவஹர்லால் நேரு, இந்திரா மற்றும் ராகுல் உள்ளிட்டோர் வறுமையை ஒழிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதமர் மோடி தான் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளார். கேரள மக்கள் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடி மீது காட்டும் அன்பை பார்த்து வருகிறேன். யாராவது நம்மை சீண்டினால், பதிலடி கொடுக்கும் வலிமை நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

