UPDATED : அக் 19, 2024 02:52 PM
ADDED : அக் 19, 2024 01:01 AM

மைசூரு: 'முடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், முதல்வர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதன்படி, முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜு ஆகியோர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அமலாக்க துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.
இந்நிலையில், மைசூரில் உள்ள 'முடா' அலுவலகம், தாலுகா அலுவலகம், கெங்கேரியில் உள்ள தேவராஜு வீடு ஆகிய மூன்று இடங்களில் நேற்று காலை, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
முடா அலுவலகத்தில், 20 அதிகாரிகள் குழு உள்ளே நுழைந்து, அலுவலகத்தின் கேட்டை பூட்டியது. சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீசார் 12 பேர், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.