நீயா... நானா...: வந்தே பாரத் ரயிலை இயக்க போட்டிப்போட்ட ரயில்வே ஊழியர்கள்
நீயா... நானா...: வந்தே பாரத் ரயிலை இயக்க போட்டிப்போட்ட ரயில்வே ஊழியர்கள்
ADDED : செப் 07, 2024 01:43 PM

கோடா: வந்தே பாரத் ரயிலை யார் இயக்குவது என கோடா மற்றும் ஆக்ரா கோட்ட ரயில் டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி., மாநிலம் ஆக்ரா முதல் ராஜஸ்தானின் உதய்ப்பூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை இயக்குவதில் இரண்டு கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை (செப்.,02) இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வியாழன் அன்று கோடா நகரில் மீண்டும் இரு கோட்டங்களில் பணிபுரியும் ரயில் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் மோதிக் கொண்டனர். இதில் சிலரின் உடைகள் கிழிக்கப்பட்டன.
இந்த பிரச்னை, ரயில்வே வாரியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களாலும் தீர்வு காண முடியவில்லை. மோதல் காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், வந்தே பாரத் ரயிலில் ஆக்ரா கோட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் பணியில் இருந்தனர். அங்கு வந்த எதிர்தரப்பினர் அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். உடனடியாக ரயிலில் இருந்த டிரைவர் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தார். டிரைவரை வெளியே வர கோஷமிட்டனர். ஆனால் அவர் வெளியே வராததால், வெளியே இருந்தவர்கள் ரயில் கதவு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இரு கோட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.