ADDED : ஜன 12, 2025 11:49 PM
கன்னோஜ்: உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தின் கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 28 தொழிலாளர்களையும், 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
உ.பி.,யில் உள்ள கன்னோஜ் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணியில் நேற்று முன்தினம் மாலை 35 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக புதிய கட்டடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதில் தொழிலாளர்கள் சிலர் மீட்கப்பட்ட நிலையில், 28 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தகவல் வெளியானது. விபத்து பற்றி தகவலறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு பகலாக தொடர்ந்து, 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மீட்புப் பணியின் வாயிலாக, உள்ளே சிக்கிய அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர்களை, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எந்த உயிர் சேதமும் இன்றி 28 தொழிலாளர்களையும் மீட்ட மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.