இந்தியாவில் இருந்து மியான்மருக்கு ரயில்; மிசோரமில் அடித்தளமிட்டுள்ளது ரயில்வே
இந்தியாவில் இருந்து மியான்மருக்கு ரயில்; மிசோரமில் அடித்தளமிட்டுள்ளது ரயில்வே
UPDATED : செப் 03, 2025 07:06 AM
ADDED : செப் 03, 2025 05:13 AM

சென்னை: இந்தியாவில் இருந்து மியான்மருக்கு, ரயில் போக்குவரத்து இணைப்பின் துவக்கமாக, மிசோரம் மலைத்தொடரில், பிரமாண்டமாக புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், கடைசி எல்லையில் இருக்கும் மாநிலம் மிசோரம். நாடு சுதந்திரமடைந்து, 78 ஆண்டுகள் முடிந்துள்ள போதிலும், மிசோரமின் தலைநகர் ஐஸ்வால், இன்னமும் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படவில்லை.
இந்த மாநிலத்தின் எல்லையோர பகுதியான, 5 கி.மீ., துாரம் பைராபி வரை மட்டுமே, ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. மிசோரமின் பைராபி முதல் சாய்ராங் இடையே, 51.38 கி.மீ., துாரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி, 11 ஆண்டுகளாக, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்தன. அவை முடிக்கப்பட்டு, விரைவில் இப்பாதை பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இதன் வாயிலாக, நமது அண்டை நாடான மியான்மருக்கு, புதிய ரயில் பாதை இணைப்புக்கு அடித்தளமிட்டுள்ளது, இந்திய ரயில்வே.
இது குறித்து, வடக்கு கிழக்கு எல்லையோர ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மலைத் தொடர், அடர்ந்த காடுகள் கொண்ட மிசோரமில் ரயில் பாதைகள் அமைக்க, 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட போதிலும், பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. 2014ல், பைராபி முதல் சாய்ராங் வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமே, இங்கு பணிகளை மேற்கொள்ள முடியும். மற்ற மாதங்களில் கடுமையான மழை, நிலச்சரிவு ஏற்படும்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, ஐ.ஐ.டி., ரூர்க்கி கட்டுமான பிரிவு வல்லுநர்கள், 'ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா' அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆலோசனை வழங்கினர். கட்டுமான பொருட்கள், இயந்திரங்களை கொண்டு வருவதற்காக, மலைப் பகுதிகளில், 200 கி.மீ., சாலைகள் அமைக்கப்பட்டன.
ரயில் பாதை வரைபடம் தயாரிக்கும் பணி, சிக்னல், தகவல் தொடர்பு பணிகளில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். தேவையான கற்கள் ஜார்கண்டில் இருந்தும், சிமென்ட் அசாமில் இருந்தும், இரும்பு கம்பிகள் ஒடிசாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன.
நம் அண்டை நாடான மியான்மருக்கான ரயில் போக்குவரத்து வசதியின் துவக்கமாக, அடித்தளமாக, இந்த புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களில், மின்மயமாக்கல் பணியும் முடியும்.
இந்தியாவில், 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைப்படி, நம் நாட்டின் அண்டை நாடுகளான நேபாளம், பூடான், மியான்மர், வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கு, ரயில் போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்துவது முக்கியமானதாக இருக்கிறது.
இந்தியாவில் மிசோரம் மாநிலம் சாய்ராங்கில் இருந்து மியான்மர் நாட்டின் எல்லை பகுதியான ஹிபிச்சுவாவுக்கு, 223 கி.மீ., துாரம் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான, 'சர்வே' பணி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாதை பணிகள், இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். இந்த ரயில் பாதையால், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மியான்மாருக்கு சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர் வந்து செல்வர்.
இதேபோல், அசாம் மாநிலத்தில் இருந்து பூட்டானுக்கும், திரிபுராவில் இருந்து வங்க தேசத்துக்கும் ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பேச்சு நடந்து வருகிறது.
பீஹார் மாநிலம், ஜோக்பனில் இருந்து நேபாளம், பிராக் நகர் இடையே, 18.6 கி.மீ., புதிய ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.