45 வயதான பெண்களுக்கு 'லோயர் பெர்த்' தானாகவே கிடைக்க ரயில்வே துறை ஏற்பாடு
45 வயதான பெண்களுக்கு 'லோயர் பெர்த்' தானாகவே கிடைக்க ரயில்வே துறை ஏற்பாடு
ADDED : டிச 06, 2025 12:59 AM
புதுடில்லி,:
“முன்பதிவு செய்யும் போது வெளிப்படையாக விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும், மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணியருக்கு, ரயிலில், 'லோயர் பெர்த்' எனப்படும், கீழ் படுக்கை வசதி தானாகவே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில், ரயில் பயணியருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பான கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதில்:
ரயில் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னுரிமை
மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், கர்ப்பிணியர் ஆகியோருக்கு ரயிலில் கீழ் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்பதிவின் போது, தங்கள் விருப்பமாக அதை தேர்வு செய்யாவிட்டாலும், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு அந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஸ்லீப்பர் வகுப்பில், ஒரு பெட்டிக்கு ஆறு முதல் ஏழு பெர்த்களும், மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் நான்கு முதல் ஐந்து பெர்த்களும், இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் மூன்று முதல் நான்கு பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ராஜ்தானி, சதாப்தி உட்பட அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு சிறப்பு முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகளில் தலா நான்கு பெர்த்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில் பயணத்தில் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில், ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
'ப்ரெய்லி'
அகலமான கதவுகள், அகலமான பெர்த்கள், சக்கர நாற்காலியை நிறுத்தும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகளும் அவர்களுக்கு தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன.
பார்வை குறைபாடு உள்ள பயணியர் வசதிக்காக, 'ப்ரெய்லி' எழுத்துகளுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நவீன அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் ரயில்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

