பத்தாண்டில் 5 லட்சம் பேருக்கு ரயில்வே வேலை: அமைச்சர் பெருமிதம்
பத்தாண்டில் 5 லட்சம் பேருக்கு ரயில்வே வேலை: அமைச்சர் பெருமிதம்
ADDED : நவ 25, 2024 08:32 PM

நாக்பூர்: கடந்த பத்தாண்டுகளில் (2014-2024) ரயில்வே துறை 5 லட்சம் பணியாளர்களை பணியமர்த்தி உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு, நாக்பூரில் உள்ள ஆஜானி ரயில்வே வளாகத்தில், அனைத்து இந்திய எஸ்.சி மற்றும் எஸ்.டி., ரயில்வே பணியாளர்கள் அமைப்பின் தேசிய மாநாடு நடந்தது. இதில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
கடந்த 2004லிருந்து 2014ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் ரயில்வே துறையால் 4.4 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
ஆனால், 2014லிருந்து 2024ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகாலத்தில் 5 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ஆண்டு வேலைவாய்ப்பு அட்டவணை அறிமுகமாகிறது. தற்போது, 12,000 இணைப்பு பெட்டிகள் தயாரிப்பில் இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.