பிரிட்டனின் எப் 35பி போர் விமானத்திற்கு மீண்டும் சோதனை; ஜப்பானில் அவசர தரையிறக்கம்
பிரிட்டனின் எப் 35பி போர் விமானத்திற்கு மீண்டும் சோதனை; ஜப்பானில் அவசர தரையிறக்கம்
ADDED : ஆக 10, 2025 06:40 PM

டோக்கியோ: பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35பி போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உலகின் மிக விலை உயர்ந்த போர் விமானங்களில் ஒன்றான பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 பி போர் விமானம், கடந்த மாதம் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர், 25 பிரிட்டன் பொறியாளர் குழு, திருவனந்தபுரத்திற்கு வந்து, விமானத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டது. பழுது சரிபார்க்கப்பட்டு, இறுதியில் 37 நாட்களுக்குப் பிறகு அந்த விமானம் தாயகம் திரும்பியது.
இந்த நிலையில், ஜப்பானின் கிரிஷிமா நகரில் உள்ள ககோஷிமா விமான நிலையத்தில், பிரிட்டனின் எப் 35பி போர் விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விமானம் பிரிட்டனின் ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வந்ததையும் ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
எப் 35பி போர் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ககோஷிமா விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் 20 நிமிடங்கள் மூடப்பட்டது. இதனால், புறப்பட தயாராக இருந்த 6 விமானங்கள் மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு கப்பல்கள், ஜப்பான் மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆப்பரேஷன் ஹைமாஸ்ட் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சிகள் ஆகஸ்ட் 12 வரை தொடரும்.