வடமாநிலங்களில் வலுக்கும் கனமழை; பீஹார், உ.பி., ஜார்க்கண்டில் 102 பேர் பலி
வடமாநிலங்களில் வலுக்கும் கனமழை; பீஹார், உ.பி., ஜார்க்கண்டில் 102 பேர் பலி
UPDATED : ஏப் 12, 2025 07:55 AM
ADDED : ஏப் 12, 2025 07:07 AM

பாட்னா: பீஹார், உ.பி., உள்ளிட்ட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு இதுவரை 102 பேர் பலியாகி உள்ளனர்.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வானிலையில் மாற்றங்கள் காணப்படுகிறது. வெயில் வாட்டி வதைத்த அதே தருணத்தில் தற்போது கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக, பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் உ.பி.யில் கனமழை பெய்து வருகிறது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பீஹார் மாநிலம் மழைக்கு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் இடி, ஆலங்கட்டி மழை பாதிப்புக்கு இதுவரை 80 பேர் பலியாகி இருக்கின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீட்டை முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீஹாரை போன்று, உ.பி.யிலும் மழையின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மழைக்கு கிட்டத்தட்ட 22 பேர் உயிரிழந்துள்ளனர். பதேபூர், ஆசம்கர்க், பெரோசாபாத், சிதாபூர் என பல பகுதிகள் மழையின் பாதிப்பை சந்தித்துள்ளன. மழைக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத், கோடர்மா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. ஏராளமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஏப்.15ம் தேதி பீஹாரின் வடக்கு பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.