இடுக்கியில் தொடரும் மழை: அணைகளில் நீர் மட்டம் உயர்வு
இடுக்கியில் தொடரும் மழை: அணைகளில் நீர் மட்டம் உயர்வு
ADDED : ஜூன் 17, 2025 01:22 AM

மூணாறு; இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை தொடர்வதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இம்மாவட்டத்தில் ஜூன் 11 மாலை முதல் பருவ மழை தீவிரமடைந்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரி மழை 80.16 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 125, மிகவும் குறைவாக உடும்பன்சோலை தாலுகாவில் 25 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் மிகவும் அதிகமாக மூணாறில் 130.2 மி.மீ., மழை பெய்தது.
நீர் மட்டம் உயர்வு
மாவட்டத்தில் உள்ள இடுக்கி, மாட்டுபட்டி, குண்டளை, செங்குளம், பொன்முடி உள்பட அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.இடுக்கி அணையின் நீர் மட்டம் (மொத்த உயரம் 554) நேற்று காலை நிலவரப்படி 230.46 அடியாக உயர்ந்தது. இதே கால அளவில் கடந்தாண்டு நீர்மட்டம் 163.09 அடியாக தான் இருந்தது. கடந்தாண்டை விட 67.37 அடி கூடுதலாகும்.
அணை திறப்பு: மழை தொடர்வதால் அணைகளில் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லார் குட்டி, மலங்கரை, லோயர்பெரியாறு ஆகிய அணைகள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு பொன்முடி அணை திறக்கப்பட்டது.
சிறுவன் காயம்: செம்மண்ணார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சனீஷ் என்பவரது வீட்டின் மீது மரம் சாய்ந்தது. அதில் மேல் கூரை சேதமடைந்து வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த சனீஷின் மகன் கிறிஸ்டி 3, மீது விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராஜாகாட்டில் தனியார் மருத்துவமனையில் கிறிஸ்டியை அனுமதித்தனர்.
சின்னக்கானல் அருகே பி.எல். ராம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மரங்கள் சாய்ந்து பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின் தடை ஏற்பட்டது. அடிமாலி அருகே கூம்பன்பாறை பகுதியில் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு பல வீடுகள் ஆபத்தாக உள்ளன. அடிமாலி அருகே பள்ளிகுன்னு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
அடிமாலி நகரில் கடைகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மூணாறு பகுதியில் நல்லதண்ணி ரோடு, சொக்கநாடு ரோடு ஆகிய பகுதிகளில் சிறிய அளவில் மண் சரிவுகள் ஏற்பட்டன.