முத்தஹனுமே கவுடாவுக்கு எதிர்ப்பு சிவகுமார் மீது ராஜண்ணா அதிருப்தி
முத்தஹனுமே கவுடாவுக்கு எதிர்ப்பு சிவகுமார் மீது ராஜண்ணா அதிருப்தி
ADDED : பிப் 15, 2024 04:54 AM

பெங்களூரு : முன்னாள் எம்.பி., முத்த ஹனுமேகவுடாவை காங்கிரசில் சேர்க்க, முட்டுக்கட்டை போடும் மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மீது, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா எரிச்சலில் உள்ளார்.
லோக்சபா தொகுதியில், துமகூரு தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்காமல் காங்கிரஸ் அவதிப்படுகிறது. இதற்கு முன், இதே தொகுதியின் காங்கிரஸ் எம்.பி,,யாக இருந்த முத்தஹனுமேகவுடா, தற்போது பா.ஜ.,வில் உள்ளார்.
இம்முறை பா.ஜ., வேட்பாளராக போட்டியிட, ஆர்வம் காண்பிக்கிறார். ஆனால், இங்கு சோமண்ணா உட்பட சில தலைவர்கள் சீட் எதிர்பார்க்கின்றனர். எனவே, முத்தஹனுமே கவுடா, காங்கிரசுக்கு தாவ திட்டமிடுகிறார்.
இவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள, முதல்வர் சித்தராமையா, ஆர்வம் காண்பிக்கிறார்.
ஆனால் துணை முதல்வர் சிவகுமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால், சிவகுமார் மீது அமைச்சர் ராஜண்ணா கடுப்பில் உள்ளார்.
இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
வாக்குறுதி திட்டங்களால், கட்சி வெற்றி பெறும் என, நினைப்பது முட்டாள் தனமாகும். ராஜஸ்தானில், அசோக் கெலாட், ஓராண்டுக்கு முன், வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் மக்கள் ஓட்டு போடவில்லை.
முத்த ஹனுமேகவுடாவை, காங்கிரசில் இணைப்பது குறித்து முடிவெடுக்க, கட்சி மேலிடம் கால அவகாசம் கேட்டுள்ளது. துமகூரு லோக்சபா தொகுதியில், முத்த ஹனுமேகவுடாவுக்கு சீட் கொடுத்தால், கட்சிக்கு வெற்றி கிடைக்கும்.
அவரை நாங்கள் வெற்றி பெற வைப்போம். முத்த ஹனுமேகவுடாவை கட்சியில் சேர்க்கவில்லை என்ற உணர்வு, மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நாங்கள் சுட்டி காண்பிப்பவருக்கு, சீட் கொடுத்தால் கொடுக்கட்டும். மாறாக வேறு ஒருவருக்கு சீட் கொடுத்தால், அவரே (சிவகுமார்) வெற்றி பெற வைக்கட்டும்.
எங்கள் மாவட்டத்தில், கார்ப்பரேஷன், வாரியங்களில் யாருக்கு பதவி கொடுக்க வேண்டும் என, நானும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும் கூறியிருந்தோம். யாருக்காவது பதவி கொடுக்கட்டும். அதை எங்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டாமா.
கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர் பதவியை, பிக்பாக்கெட் அடிப்பவர், வட்டி தொழில் செய்பவருக்கு கொடுத்தால், கட்சியின் கதி என்ன.
யாருக்கு பதவி கொடுத்தால், கட்சிக்கு லாபம் என்பது, எங்களுக்கு தெரியும். வேறு நாட்டில் அமர்ந்து கொண்டு, பதவிகளில் அமர்த்தினால், தொண்டர்களின் நிலை என்ன.
கட்சிக்கு பலம் கிடைக்க வேண்டும் என, நாங்கள் ஆலோசனை கூறினோம். அதை நிராகரித்து, யாருக்கு வேண்டுமானாலும் பதவி கொடுக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

